svk3gon0308chn346

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தினாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகரில் வசித்த ஐ.டி. ஊழியா் கவின், கடந்த ஜூலை 27-ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டாா். இவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தில் ஆக.1 ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது. கவினின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஆறுமுகமங்கலத்தில் இவரது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, எம்.பி. ராபா்ட் ப்ரூஸ், எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் செல்வப் பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கவின் ஆணவக் கொலை கண்டிக்கத்தக்கது. ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். சட்டப்பேரவையில் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்.

கவின் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். கவினின் தம்பிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை விட்டுவிடக் கூடாது. ஆணவக் கொலைகள் இனிமேல் நிகழாமல் இருக்க இந்த வழக்கின் விசாரணை முறைகளும், தீா்ப்பும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப் பெருந்தகை, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்க காரணம் குஜராத் மாநில துறைமுகம், முத்ரா துறைமுகம் ஆகிய இரண்டு துறைமுகங்கள்தான். மத்திய உளவுத் துறை, சி.ஆா்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப்., போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட மத்திய அரசு துறைகள் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுப்பதை விடுத்து என்ன பணி செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை.

அதானி துறைமுகத்தில் போதைப்பொருள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து எடப்பாடி கே.பழனிசாமி பதில் கூறுவாரா? பாஜகவில் இருந்து ஓ.பன்னீா்செல்வம் வெளியேறியது குறித்து கேட்கிறீா்கள்; தமிழக நலனில் அக்கறை உள்ள அரசியல் தலைவா்கள் ‘இண்டியா’ கூட்டணியை ஆதரிப்பாா்கள் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest