1000790001

தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இத்தொழிற்சாலையில் விற்பனைக்கான முதல் காரில் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்விற்கு, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நான் இந்த நேரத்தில் மனதார வரவேற்கிறேன். தெற்காசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய பெருமைமிகு குழுமம்.

முதலீடுகளுக்காக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்ததற்குப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ‘வியட்நாம்’ என்றாலே வியப்புதான். அந்த வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ‘வின்ஃபாஸ்ட்’, நான் அடிக்கல் நாட்டி, 18 மாதத்தில் தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தைத் தொடங்கி, நமக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

இ-வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகவும் மற்றும் நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்தை முன்னெடுக்கும் நிறுவனமாகவும் இருக்கும் வின்பாஃஸ்ட், தமிழ்நாடு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  

இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில், 40 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்துதான் உற்பத்தியாகிறது. தமிழ்நாடுதான், இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் ‘கேப்பிட்டல்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன்.

சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட். ஸ்ரீபெரும்பதூரில் எப்படி முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டதோ, அதேபோன்று, தற்போது தூத்துக்குடியில் முதல் மின் வாகன உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

 இதன்மூலம் தமிழ்நாட்டிற்கும், வியட்நாமிற்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும். கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, ரூ.16 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 3,500 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், இந்த உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.   

அடுத்த மாதமே, இந்த சிப்காட் தொழிற்பேட்டையில், அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. இன்று தொடக்க விழா நடைபெற்றுள்ளது. 18 மாதத்தில், இந்த நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது. இதனால், தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மிகப் பெரிய தொழில் பகுதியாக வளர்ச்சியடையும்.

உற்பத்தி செய்யப்பட்ட இ-கார்கள்
உற்பத்தி செய்யப்பட்ட இ-கார்கள்

அதனால், உறுதியோடு சொல்கிறேன். இந்நாள் தென் மாவட்டங்களின் ஒரு பொன்னாள். இதுதான், தமிழ்நாட்டின் ‘Ease of doing Business’-க்கு அத்தாட்சி. முதல்கட்டமாக, இதுவரை ஆயிரத்து ரூ.300 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின் வாகன SUV உற்பத்தியாக இருக்கிறது. 

தெற்காசியாவிலேயே, வியட்நாமிற்கு வெளியில், இந்த நிறுவனம் தொடங்கியிருக்கும் முதல் மின் வாகன உற்பத்தித்  திட்டம் இதுதான். தமிழ்நாட்டில், அதுவும் நம்முடைய தூத்துக்குடியில் இருக்கும் இந்த ஆலைதான், இந்தியாவிலேயே முழு மின்சார பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்.

இதனால், இந்த வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கிறது. “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்புப் பயிற்சி பெற்று, இதே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 229 டிப்ளமோ படித்த மாணவர்கள், இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

உற்பத்தி செய்யப்பட்ட கார்கள்
உற்பத்தி செய்யப்பட்ட கார்கள்

இந்தத் திட்டத்தால் தூத்துக்குடியைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும், உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகள் பெருகும். சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஓசூர் ஆகியவற்றைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் மோட்டார் வாகன தொழிற்கூடமாக தூத்துக்குடி உருவெடுத்து வருகிறது.

இந்தியாவின் இரண்டாவது முழு மின் வாகன உற்பத்தித் திட்டம் என்ற வகையில், கடந்த  2024-ம் ஆண்டு செப்டம்பருக்குள் ”TATA JLR”  நிறுவனத்தின் மின் வாகன உற்பத்திக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில், அடிக்கல் நாட்டினேன்.   

இதன்மூலம், தமிழ்நாடுதான் ‘மின் வாகனங்களின் தலைநகரம்’ என்று உலகத்திற்கு நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம். தற்போது, ஹுண்டாய், நிஸான், டாடா மோட்டார்ஸ், BMW, BYD, ஓலா, ஏர்தர், டிவிஎஸ், ஆம்பியர் போன்ற முன்னணி நிறுவனங்கள், தங்களின் மின் வாகன உற்பத்தியைத் தொடங்கிவிட்டார்கள்.

இன்னும் பல பாரம்பரிய கார் நிறுவனங்களும், மின்சார வாகனங்களின் பாதையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். வின் குழுமத்தினரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.

விழாவில் கலந்து கொண்டவர்கள்

உங்களின் வின் குழுமம் வாகனத் துறையில் மட்டுமல்லாமல், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் கோலோச்சும் குழுமம். உங்களின் வருங்கால முதலீடுகளை எல்லாம், தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இந்த நேரத்தில் நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

வின்ஃபாஸ்ட் உற்பத்தித் திட்டம் தூத்துக்குடியில் நிறுவப்பட உறுதுணையாக இருந்த திராவிட மாடல் அரசு, உங்களின் அனைத்து முதலீட்டுத் திட்டங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து தரத் தயாராக இருக்கிறோம்” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest