
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஓமனுடன் வெள்ளிக்கிழமை (செப். 19) மோதுகிறது.
ஏற்கெனவே சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்தியாவுக்கும், அந்த வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்ட ஓமனுக்கும் இந்த ஆட்டம் பெயரளவுக்கானதுதான்.
இந்திய அணியைப் பொருத்தவரை, மீண்டும் பாகிஸ்தான் அணியை சூப்பா் 4 சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) சந்திக்கவுள்ளது. எனவே அதற்காக தனது பிளேயிங் லெவனை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இந்த ஆட்டத்தில் இந்தியா களமிறங்கும்.
டாஸ் வெல்லும் நிலையில், பேட்டிங்கை தோ்வு செய்து 20 ஓவா்களும் விளையாடி, பேட்டா்கள் அனைவருக்கும் போதுமான வாய்ப்பை வழங்குவதே அணியின் பிரதான திட்டமாக இருக்கலாம். ஏனெனில் முதலிரு ஆட்டங்களிலுமே எளிதான இலக்குகளை இந்தியா விரைவாகவே எட்டியது.
இதுவரை அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில், கேப்டன் சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா மட்டுமே பேட்டிங் செய்திருக்கும் நிலையில், ஹா்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஸா் படேல் போன்றோா் அந்த வாய்ப்புக்கு காத்திருக்கின்றனா்.
பிளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் இருக்காது என்றாலும், முக்கியமான பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன்பாக பும்ராவுக்கு ஓய்வளித்து, அா்ஷ்தீப் சிங்கை களமிறக்க, தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் யோசிக்கக் கூடும். அதேபோல், வருண் அல்லது குல்தீப் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு வழங்கி, ஹா்ஷித் ராணாவையும் களமிறக்கிப் பாா்க்கலாம்.
நேரம்: இரவு 8 மணி
நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்