
இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
அரசு வேலைகள் உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீட்டின் கீழ் ஆதாயம் பெற்றிருந்தாலும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
மேலும், போலியாக எஸ்சி சான்றிதழைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இருந்தாலும், தேர்தல் வெற்றி செல்லாததாக அறிவிக்கப்படும் என்று பேரவைக் கூட்டத்தில் ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் ஃபட்னவீஸ் பேசும்போது, பட்டியல் சாதியினர் இடஒதுக்கீட்டை இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பெற முடியும், மற்ற மதத்தினரைச் சேர்ந்தவர்கள் அனுபவிக்க முடியாது என்பதை கடந்த நவம்பர் 26, 2024 அன்று உச்ச நீதிமன்ற பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசினார்.
இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதத்தினர் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்று அரசு வேலைகள் உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீட்டின் கீழ் ஆதாயம் பெற்றிருந்தால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சாதிச் சான்றிதழ்களும் உரிய நடைமுறைகளுடன் ரத்து செய்யப்படும், அவர்கள் பெற்ற நிதியுதவிகளும் திரும்பப் பெற பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நிகழாண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும் என்று மாநில உள்துறை (ஊரகப் பகுதி) இணையமைச்சர் பங்கஜ் போயர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்தச் சட்டத்தை வகுக்க மாநில காவல் துறை டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிகழாண்டு குளிர்கால கூட்டத்தொடரில் அந்தச் சட்டம் இயற்றப்படும் என்றும் அந்தச் சட்டம் பிற 10 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைவிட கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !