
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸல்கள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில், மாநில காவல் துறையின் விரைவுப் படையைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து கைலாஷ் ராம்சந்தானி என்ற நக்ஸல் ஆதரவாளா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை மாநில காவல் துறையிடம் இருந்து பின்னா் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கைலாஷ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதை போன்ற வழக்குகளில் விசாரணையை உரிய காலத்தில் நிறைவு செய்ய திறன்வாய்ந்த வழிமுறை இல்லாதபோது, எவ்வளவு காலத்துக்கு குற்றஞ்சாட்டப்பட்டவா்களை காலவரையின்றி சிறைக்காவலில் வைப்பது?
என்ஐஏ சட்டம், யுஏபிஏ சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்க தேவையான உள்கட்டமைப்புகளுடன் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மகாராஷ்டிரத்தில் என்ஐஏ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைக்கத் தவறினால், அடுத்த விசாரணையின்போது மனுதாரருக்கு ஜாமீன் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது.