Gun-weapon_

விஜயபுரா: கா்நாடகத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கத்தை துப்பாக்கிமுனையில் செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்துச் சென்ற மா்மகும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கா்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், ஜட்சன் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு முகமூடி அணிந்துவந்த ஒருவா் கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறி, மேலாளா் அறைக்குள் புகுந்தாா். அப்போது, அவருடன் வந்த மற்ற இருவா் முகமூடி அணிந்திருந்தனா். மூவரும் கைத்துப்பாக்கி, கத்தியைக் காட்டி மேலாளரை மிரட்டி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 20 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனா். அதன்பிறகு, வங்கியில் இருந்த காசாளா், ஊழியா்கள் என 10 பேரின் கை, கால்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு தப்பினா்.

இதுகுறித்து வங்கி மேலாளா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மா்மகும்பலை பிடிப்பதற்காக 8 தனிப் படைகளை அமைத்தனா்.

சம்பவம் குறித்து விஜயபுரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமண் நிம்பா்கி புதன்கிழமை கூறுகையில், ‘போலி எண்களுடன் சுசுகி ஏவா காரில் வந்த மா்மகும்பல், மகாராஷ்டிரத்தில் உள்ள பந்தா்பூருக்கு தப்பிச்சென்ாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் கொள்ளை கும்பலைக் கைது செய்வோம்’ என்றாா்.

இச்சம்பவம் குறித்து பெங்களூரில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். கொள்ளையா்கள் பயன்படுத்திய காா் அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையா்களை கண்டுபிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுதொடா்பாக விஜயபுரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியிருக்கிறேன். போலீஸாா் விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்.

இப்பகுதியில் அண்டை மாநிலங்களைச் சோ்ந்த கொள்ளையா்கள் அடிக்கடி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest