
கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஆதரவு ’சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினர் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய தூதரகங்கள் காலிஸ்தானிகளை குறிவைத்து உளவு அமைப்பாக செயல்படுவதாகவும் கண்காணிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடாவின் வான்கூவர் இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப். 18) முற்றுகையிடப் போவதாகவும், அன்று தூதரகத்துக்கு வருகை தர திட்டமிட்டிருக்கும் மக்கள், வேறு தேதியை தேர்வு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 18 அன்று ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
ஆனால், தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய தூதரகங்கள் காலிஸ்தானியர்களை குறிவைத்து உளவு அமைப்பாக நடத்தி வருகின்றன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அல்லது வான்கூவர் இந்திய தூதரகம் தரப்பில் எவ்வித கருத்தும் பகிரப்படவில்லை.