
கன்னியாகுமரி மாவட்டம், வீயன்னூர் சாய்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணியின் மனைவி அல்போன்சாள் (55). தங்கமணி இறந்து விட்டார். அல்போன்சாள் தனியார் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகன் பிரின்ஸ் (38) டெம்போ டிரைவராக வேலைசெய்துவருகிறார். பிரின்சின் மனைவி மஞ்சு (35) வெள்ளிகோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றுகிறார். பிரின்ஸுக்கும் மஞ்சுவுக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரின்ஸ், அவரது மனைவி, மகள்கள், தாய் அல்போன்சாள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். பிரின்ஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று மனைவி மஞ்சுவிடம் தகராறு செய்துவந்துள்ளார். பிரின்ஸ் மதுபோதையில் தகராறு செய்யும்போது மஞ்சு திட்டுவது வழக்கமாம். அதே சமயம், தனது மகனை மஞ்சு திட்டும்போதெல்லாம் மகனுக்கு ஆதரவாக செயல்படுவாராம் தாய் அல்போன்சாள். எனவே மகனை திட்டும் மருமகள் மஞ்சுவை அல்போன்சாள் திட்டுவாராம். ‘எனது மகனை பற்றி தவறாக பேசாதே’ என மருமகளிடம் மாமியார் சண்டை போடுவாராம்.

இந்நிலையில் நேற்று முன் தினம்இரவு மது போதையில் பிரின்ஸ் வீட்டு கதவை தட்டியுள்ளார். பிரின்ஸை அவரது மனைவி மஞ்சுவும், மகள்களும் வாசலை திறந்து வீட்டுக்குள் அழைத்தனர். பிரின்ஸ் வாசலை பிடித்தபடி தள்ளாடிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து பிரின்ஸை இழுத்து வீட்டுக்கு கொண்டு வர முயற்சித்துள்ளார் மஞ்சு. அப்போது கணவனை மஞ்சு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அல்போன்சாள் தகாத வார்த்தைகளால் மஞ்சுவை திட்டியதுடன், அவரை காலால் மிதித்து கீழே தள்ளியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அல்போன்சாள், அப்பகுதியில் கிடந்த கல்லை எடுத்து மஞ்சுவின் தலையில் தாக்கியுள்ளார். மேலும், மஞ்சுவின் வலது காதை மாமியார் அல்போன்ஸாள் கடித்திருக்கிறார்.

மஞ்சுவின் தலையிலும் காதிலும் ரத்தம் சொட்டியதால் அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து மஞ்சு திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருவட்டார் போலீஸார் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.