
‘காந்தாரா சாப்டர் – 1’ திரைப்படக் காட்சிகள் எதையும் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடகத்தின் கிராமப்புற பகுதிகளில் மக்கள் பன்னெடுங்காலமாக வழிபடும் தெய்வத்தின் சிறப்புகளைப் பற்றியதொரு வரலாற்றுக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், காந்தாரா திரைப்படத்தின் முன்கதையை மையமாக வைத்து, ‘காந்தாரா சாப்டர் – 1’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டியே இப்பத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு தசராவையொட்டி கடந்த அக். 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், ‘காந்தாரா சாப்டர் – 1’ திரைப்படக் காட்சிகள் எதையும் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் ரிஷப் ஷெட்டி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை(அக். 3) வெளியிட்டுள்ளதொரு பதிவில்:
‘திருட்டுத்தனமாக விடியோக்கள் பகிரப்படுவதை ஊக்குவிக்க வேண்டாமென உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். திருட்டுத்தனமாக விடியோக்கள் பகிரப்படுவதால், ஒரு திரைப்படம் பாதிப்பைச் சந்திப்பதுடன் மட்டுமில்லாது, தங்கள் கனவுகளுக்கு உயிரூட்ட கடுமையாக உழைத்துள்ள ஆயிரக்கணக்கானோரின் உழைப்பும் பாதிக்கப்படுகிறது.
‘காந்தாரா சாப்டர் – 1’ உங்களுக்காகவே பிரத்யேகமாக அதன் ஒலி, காட்சி, அதிலுள்ள உணர்ச்சி ஆகிய ஒவ்வொன்றையும் பெரிய திரையில், அதாவது திரையரங்குகளுக்காகவே உருவாக்கப்பட்டது.
ஆகவே, ரசிகர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது இதைத்தான்… திரையரங்குகளில் படத்தை படம்பிடித்து அதன்பின் அந்த விடியோக்களை பகிர வேண்டாம்!
சினிமாவிடம் இருக்கும் மேஜிக்கை இந்தச் செயல் பறித்து விடுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.