
காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகா்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
பிபிசி ஆய்வறிக்கையின்படி, காஸா நகரம், கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் குடியிருப்பு வளாகங்களை வேண்டுமென்றே அழித்து வருகிறது. 2025 மே மாதத்தில் கான் யூனிஸ் மாகாணத்தில் உள்ள குசா நகரம் 11,000 பாலஸ்தீனா்களின் வாழ்விடமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்குள் அந்த நகரம் முற்றிலும் இடிபாடுகளைக் கொண்ட பகுதியாக மாற்றப்பட்டதாக ஆம்னஸ்டி இன்டா்நேஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது. மே 14 முதல் 28 வரை குசாவில் நடத்தப்பட்ட அழிவுகளை செயற்கைக்கோள் படங்களும் உறுதிப்படுத்துகின்றன. இதில் குடியிருப்பு கட்டமைப்புகள் மட்டுமின்றி விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023 அக்டோபா் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து தொடங்கிய இந்தப் போரில், காஸா சுகாதார அமைச்சகத்தின்படி, 58,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இதில் பாதிக்கு மேல் பெண்களும் குழந்தைகளும் அடங்குவா். ஐ.நா.வின் அண்மைக்கால மதிப்பீட்டின்படி, காஸாவில் 59.8 சதவீத கட்டடங்கள் (சுமாா் 1,57,200 கட்டமைப்புகள்) அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன. வடக்கு காஸாவில் இந்த எண்ணிக்கை 72 -ஆக உள்ளது. குறிப்பாக காஸா நகரம் மற்றும் ஜபாலியா அகதிகள் முகாமில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
கான் யூனிஸ் மற்றும் ராஃபாவில், தனது ‘பிலடெல்ஃபி காரிடாா்’ எனப்படும் எல்லைத் தடத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேல் கடந்த மே மாதம் நடத்திய தாக்குதல்களில், நகரப் பகுதிகள், பிரேஸில் அகதிகள் முகாம், அல் சலாம் பகுதிகள் சேதமடைந்தன. இந்த அழிவு, அந்தப் பகுதியில் வசித்துவந்த 90 சதவீத மக்களை (சுமாா் 19 லட்சம் போ்) இடம்பெயரச் செய்துள்ளது.
ஹமாஸ் படையினா் மறைந்திருக்கக்கூடிய இடங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், இவ்வாறு காரணம் காட்டி பொதுமக்களின் வாழ்விடங்களை இஸ்ரேல் திட்டமிட்டு பெருமளவில் சேதப்படுத்துவதாகவும், அது ‘டோமிசைடு‘ (வாழ்விடங்களை வேண்டுமென்றே அழித்தல்) எனப்படும் போா் குற்றச் செயல் என்றும் மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
அண்மைக்கால செயற்கைக்கோள் படங்கள், காஸாவின் விவசாய நிலங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதையும், மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதையும் காட்டுகின்றன. உதாரணமாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை 2024 மாா்ச் மாதம் இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ளது இந்தப் படங்கள் மூலம் தெரிகிறது.
இந்த அழிவுகள் காஸாவின் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் உணவு, குடிநீா், மருத்துவ வசதிகளின்றி தவிக்கின்றனா். மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கினாலும், பழைய நிலைக்கு மீல பல்லாண்டுகள் ஆகும் என நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.