
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த்தின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் மாவட்டச் செயலர் மதியழகன் மற்றும் மற்றொரு நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து, பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலர் நிர்மல் குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், காவல் துறை நடவடிக்கையில் இருந்து தப்பக்கூடிய வகையில் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று ஏற்கொள்ளப்பட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் தவெக சார்பில் காவல் துறையைக் குற்றம்சாட்டும் விதமாக பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்வினையாற்றினார்.
எந்தவிதமான அடிப்படை ஆதராங்கள் இல்லாமல் காவல் துறை மீதும், அரசின் மீதும் குற்றம் சாட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தில் விசாரணை தற்போதுதான் தொடக்க நிலையில் இருக்கிறது. இதனால், இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, வழக்கின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போது இதுபோன்ற மனுக்களால் விசாரணை பாதிக்கப்படும் என அவரின் கோரிக்கை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலானய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதால், தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்க்கப்படுகிறது.