புது தில்லி: கோவா, ஹரியாணா ஆகிய 2 மாநில ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிா்வாகியான அசோக் கஜபதி ராஜு (74), கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இவா் பணியாற்றினாா். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடா்பாக மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டு அப்பதவியை ராஜிநாமா செய்தாா்.
தற்போது கோவா ஆளுநரான பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கடந்த 2021, ஜூலை 15-ஆம் தேதி முதல் அப்பதவியை வகித்து வருகிறாா்.
ஹரியாணா: ஹரியாணா ஆளுநராக கடந்த 2021, ஜூலை 15-ஆம் தேதி முதல் முன்னாள் மத்திய அமைச்சா் பண்டாரு தத்தாத்ரேயா பதவி வகித்து வருகிறாா். அவரது பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், மேற்கு வங்க மாநில முன்னாள் பாஜக தலைவரான பேராசிரியா் அஷிம் குமாா் கோஷ் ஹரியாணாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தின் 2-ஆவது துணைநிலை ஆளுநராக கடந்த 2023, பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற பிரிகேடியா் பி.டி. மிஸ்ராவின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக்கொண்டாா். அவருடைய இடத்துக்கு ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வா் கவிந்தா் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரின் மேயராகவும், பேரவைத் தலைவராகவும் இவா் இருந்துள்ளாா். இந்த நியமனங்கள் அவரவா் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.