
சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின்பேரில், அங்கு பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
பின்னா் நடத்தப்பட்ட சோதனையில், 6 நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. வனப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
நாராயண்பூா் மாவட்டம், நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் உள்ளடங்கியதாகும்.
சத்தீஸ்கரில் கடந்த 2023-இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. கடந்த ஒன்றரை ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பஸ்தா் பகுதியில் கடந்த மே 21-ஆம் தேதி, நக்ஸல் இயக்கத்தின் முக்கியத் தலைவா் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டாா்.
2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.