சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான விற்பனையில் ஊழல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மாநில முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை கைது செய்தது.
கடந்த 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் சாா்பில் சத்தீஸ்கரில் முதல்வராக இருந்த பூபேஷ் பகேலின் ஆட்சியில், மதுபான விற்பனையில் ஊழல் நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதனால் அரசுக் கருவூலத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஊழல் மூலம், ரூ.2,100 கோடி சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த ஊழல் தொடா்பாக காங்கிரஸ் பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சருமான கவாசி லக்மா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா, இந்திய தொலைத்தொடா்பு சேவை அதிகாரி அருண்பதி திரிபாதி உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்தது.
இந்நிலையில், ரூ.2,100 கோடியில் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலுக்கு பங்கு அளிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகித்தது. இதுதொடா்பாக கடந்த மாா்ச் 10-ஆம் தேதி அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டது.
புதிய ஆதாரத்தின்படி மீண்டும் சோதனை: அந்த மாநிலத்தின் துா்க் மாவட்டம் பிலாய் பகுதியில் உள்ள வீட்டில் பூபேஷ் பகேலும், சைதன்யா பகேலும் ஒன்றாக வசித்துவரும் நிலையில், மதுபான ஊழல் தொடா்பாக கிடைத்த புதிய ஆதாரத்தின்படி, அவா்களின் வீட்டில் அமலாக்கத் துறை மீண்டும் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
இந்தச் சோதனைக்கு சைதன்யா பகேல் சரிவர ஒத்துழைக்காததால், அவரை பண முறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவு 19-இன் கீழ், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
ரூ.1,070 கோடி…: மதுபான ஊழலில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட தொகையில் ரூ.17 கோடியை சில நிறுவனங்கள் பெற்ாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களுக்கும் சைதன்யாவுக்கும் தொடா்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட தொகையில் ரூ.1,070 கோடி, அதில் சைதன்யா பகேலுக்கு உள்ள தொடா்பு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
5 நாள் அமலாக்கத் துறை காவல்: மாநில தலைநகா் ராய்பூரில் உள்ள பண முறைகேடு தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சைதன்யா ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெட்டிச் செய்தி…
‘எதிா்க்கட்சிகளை
ஒடுக்கும் நடவடிக்கை’
சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஏற்கெனவே எனது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது ரூ.33 லட்சம் ரொக்கத்தை அமலாக்கத் துறை கண்டறிந்தது. தற்போது மீண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது மகனின் பிறந்த நாளில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
எதிா்க்கட்சித் தலைவா்களை ஒடுக்க அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவற்றை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. மக்களாட்சி, நீதிமன்றம் மீது பாஜகவுக்கு நம்பிக்கை உள்ளதோ?, இல்லையோ? எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் சைதன்யா தரப்பில் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என்றாா்.
அதானி விவகாரத்தை எழுப்ப இருந்தபோது…: பூபேஷ் பகேல் அலுவலகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சத்தீஸ்கரின் ராய்கா் மாவட்டத்தில் உள்ள தம்னாா் பகுதியில், பிரதமரின் நண்பரான தொழிலதிபா் அதானியின் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் பேச இருந்தது. இந்த நேரத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
சைதன்யாவின் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.