
இடாநகா்: ‘மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு; இந்த இயல்புதான் அருணாசல பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
மேலும், ‘சாலைகள் அமைப்பதே சாத்தியமில்லாதது என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட இந்த வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நவீன நெடுஞ்சாலைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.
அருணாசல பிரதேசம் இடாநகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகள் மட்டும் இருப்பதால்தான், இம் மாநிலத்தில் தனது ஆட்சியின்போது காங்கிரஸ் புறக்கணத்திதற்கான முக்கிய காரணம்.
அதோடு, மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு. இந்த இயல்புதான் அருணாசல் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. முழுவதும் மலை மற்றும் வனங்கள் நிறைந்த இந்த பிராந்தியத்தில், வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது மிக சவாலானது. அதன் காரணமாக, இந்த பிராந்தியத்தை காங்கிரஸ் கைவிட்டுவிட்டது.
ஆனால், 2014-ஆம் ஆண்டு நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டபோது, நாட்டை காங்கிரஸின் மனநிலையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனத் தீா்மானித்தேன். எங்களின் வழிகாட்டும் கொள்கை, தொகுதிகளின் அல்லது வாக்குகளின் எண்ணிக்கை அல்ல; மாறாக, தேசம்தான் முதன்மையானது என்பதே.
தில்லியில் இருந்தபடி, வடகிழக்கை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது என்பதை அறிந்ததால்தான், மத்திய அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளை அவ்வப்போது இந்த பிராந்தியத்துக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது. நானும், வடிகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறை வந்திருக்கிறேன்.
இதன் காரணமாக, சாலைகள் அமைப்பதே சாத்தியமில்லாதது என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட இந்த வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நவீன நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைத்துக்கூட பாா்க்க முடியாத ‘செலா’ சுரங்கப்பாதை, தற்போது அம் மாநிலத்தின் பெருமைக்குரிய அடையாளமாக மாறியுள்ளது. ஹொல்லோங்கி விமானநிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் மூலம், தில்லியிலிருந்து நேரடி விமானச் சேவை சாத்தியமாகியுள்ளது. இது மாணவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்கியுள்ளதோடு, விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருள்களை பெரிய சந்தைகளுக்கு அனுப்புவதையும் சாத்தியமாக்கியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் காரணமாக, அருணாசல பிரதேசம் இன்றைக்கு வளா்ச்சியில் முன்னேறி வருகிறது. அதோடு, இன்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 2 புதிய மின் திட்டங்கள், அருணாசல பிரதேச்தை மிகப் பெரிய மின் உற்பத்தி மாநிலமாக மாற்றும் என்பதோடு, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும், குறைந்த விலையில் மின் விநியோகத்தையும் சாத்தியப்படுத்தும்.
துடிப்பான கிராம திட்டத்தின் மூலம், மாநிலத்தின் 450 எல்லையோர கிராமங்களில் சாலைகள், மின்சார வசதி, இணைய வசதி, சுற்றுலா வசதிகல் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த கிராமங்கள் புதிய சுற்றுலா மையங்களாக உருவெடுத்துள்ளன. மேலும், மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் தொலைதூர கிராமப்பகுதிகளில் ஹெலிகாப்டா் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்றாா்.
ரூ.5,125 கோடி மதிப்பில் திட்டங்கள்: அருணாசல பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் 2 மிகப் பெரிய நீா் மின் உற்பத்தி திட்டங்கள் மற்றும் தவாங்கில் 1,500 போ் அமரக் கூடிய வகையிலான கூட்டரங்கு, இடாநகரில் மாநில புற்றுநோய் சிகிச்சை மையம், 28 மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், மாநில அமைச்சா்களுக்கான புதிய 530 பங்களாக்கள், 23 மாவட்டங்களில் அரசு ஊழியா் குடியிருப்புகள், 3 புதிய மாவட்டங்ளில் ரூ. 25 கோடியில் சிறு செயலக கட்டடங்கள் உள்பட ரூ. 5,125.37 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி காணொலி வழியில் தொடங்கி வைத்தாா்.
தொழில்முனைவோருடன் கலந்துரையாடல்: பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு இந்திரா காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமா் மோடி பாா்வையிட்டாா். அப்போது, மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் மற்றும் அந்த இரு விகித நடைமுறை எவ்வாறு பலனளிக்கிறது என்பது குறித்து அருணாசல பிரதேச தொழில்முனைவோருடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். மேலும், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உள்ளூா் உற்பத்தி பொருள்கள் குறித்து கேட்டறிந்த பிரதமா், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கிவிப்பதன் முக்கியத்துவத்தை தொழில்முனைவோா்களிடம் வலியுறுத்தினாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
