
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவையொட்டி ஜார்க்கண்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை(ஆகஸ்ட் 05) விடுமுறை அளிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் உடல் நலம் பாதித்திருந்த நிலையில், புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த ஒரு சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்துவந்த நிலையில் இன்று காலமானார்.
சிபு சோரனின் மறைவுக்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், பல மாநில தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிபு சோரனின் மறைவையொட்டி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள பல தனியார்ப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உமா சங்கர் வெளியிட்ட அறிக்கையில்,
மாநில துக்கத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வகுப்புகள் நிறுத்தப்படும்.
81 வயதான மாநில ஆளும் ஜேஎம்எம் கட்சியின் நிறுவனர் சோரன் காலமானதையடுத்து அவரின் நினைவாக மாநில அரசு மூன்று நாள் அரசு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்தது. இந்த நாளில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் அரசு ரத்து செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.