
புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினர் சிபு சோரன் மறைவையொட்டி, மாநிலங்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபு சோரன் இன்று காலமானார். அவருக்கு வயது 81. மாநிலங்களவை இன்று காலை கூடியதும் அவரது மறைவு குறித்து தெரிவிக்கப்பட்டு, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் இன்று காலமானார்.
புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிபு சோரன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில, கடந்த ஒரு சில நாள்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது. இந்நிலையில் இன்று அவர் காலமானதாகத் தகவல்கள் வெளியாகின.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சிபு சோரனின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆபரேஷன் சிந்தூர், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்த விவகாரம் தொடர்பான அமளி காரணமாக முதல் வாரம் முக்கிய அலுவல்கள் ஏதுமின்றி அவைகள் முடங்கின. இரண்டாவது வாரத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. பிறகு மீண்டும் பிகார் விவகாரம் காரணமாக அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று கூடின. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை 6 மாத காலத்துக்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் சிபு சோரன் மறைவு குறித்து அவையில் தெரிவிக்கப்பட்டு, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Rajya Sabha proceedings were adjourned for the day as a mark of respect following the death of sitting MP Shibu Soren.
இதையும் படிக்க.. வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்