
கங்கை கொண்ட சோழபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இளையாராவை பிரதம் மோடி மிகவும் பாராட்டி பேசியுள்ளார்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தொடக்கமாக, ஓம் சிவோஹம் என்ற பாடலை இளையராஜா இசையமைத்து முடிக்கும்போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அடுத்து, விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இளையராஜா இசைத்தார்.
20 நிமிடம் இசையமைத்த ராஜாவின் இசையைப் பிரதமர் மோடி மிகவும் ரசித்து பார்த்தார். பார்வையாளர்களும் ராஜாவின் இசையில் மெய் மறந்து ரசித்தனர்.
சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா
வணக்கம் சோழ மண்டலம். நமச்சிவாயா. நாதன் தாள் வாழ்க எனத் தனதுப் பேச்சை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும், அவர் பேசியதாவது:
இது ராஜராஜ சோழனின் இடம். இந்த இடத்திலேயே என்னுடைய நண்பரான இளையராஜாவின் இசை நம்மை சிவ பக்தியில் ஆழ்த்தியது.
நான் காசியின் எம்.பி. ஆனால், இங்கு இந்த ஓம் நமச்சிவாயா என்ற கோஷங்களைக் கேட்கும்போது என் உடலெல்லாம் புல்லரிக்கிறது.
ஆடி மாதத்திலே ராஜராஜ சோழனின் தரிசனத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையும் மந்திரங்களைக் கேட்டு ஓர் ஆன்மிக அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் அடைந்தேன்.
பெருமை கொள்கிறேன்
140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில் வேண்டினேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனேன்.
இந்தச் சோழர்கள் தங்களது வியாபாரத்தை இலங்கை, மாலத்தீவு, தெற்காசியா வரை நீட்டிருந்தார்கள். நான் நேற்றுதான் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்தேன். இன்று, இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தழிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என்ற பெரும் அறிவிப்பை வெளியிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.