
சுதந்திர இந்தியா 100 வயதை அடையும் போதும், இந்தியாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு சர்வதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, விடியோ பகிர்ந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த விடியோவில் முகேஷ் அம்பானி பேசியதாவது:
”இன்று 145 கோடி இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகையாகும். நமது மரியாதைக்குரிய, அன்பு பிரதமர் நரேந்திரபாய் மோடியின் 75 வது பிறந்த நாள்.
இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக சமூகத்தின் சார்பாகவும், ரிலையன்ஸ் குடும்பம் மற்றும் அம்பானி குடும்பத்தின் சார்பாகவும் பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் அமிர்த்த காலத்தில் பிரதமரின் 75 வது பிறந்த நாள் வருவது தற்செயலானது அல்ல. இந்தியா 100 வயதை எட்டும்போது, மோடி தொடர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபர் பில் கேட்ஸ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ஷாருக்கான், ஆமிர் கான் உள்ளிட்டோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.