akk-1759484633683d

நாடு முழுவதும் சைபர் கிரிமினல் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் மக்கள் சைபர் கிரிமினல்களிடம் பணத்தை இழப்பது நிற்கவில்லை.

மும்பை போலீஸ் தலைமை அலுவலகத்தில் இணையத்தள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய அக்‌ஷய் குமார், ”எனது வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகள் வீட்டில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தார்.

சில வீடியோ கேம்களில் நீங்கள் கண்ணுக்குத் தெரியாத வேறு ஒரு நபருடன் ஆன்லைனில் விளையாட முடியும். அப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது எதிர்முனையிலிருந்து உங்களுடன் விளையாடிக்கொண்டிருப்பவர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பலாம்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அக்‌ஷய்  குமார்
அக்‌ஷய் குமார்

எனது மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்முனையில் இருந்து விளையாடிக்கொண்டிருந்தவர் ஆணா, பெண்ணா என்று கேட்டு மெசேஜ் அனுப்பினார். எனது மகள் தான் பெண் என்று பதில் கொடுத்தார்.

உடனே அந்த நபர் உனது நிர்வாண புகைப்படத்தை அனுப்ப முடியுமா என்று கேட்டார். உடனே எனது மகள் வீடியோ கேமில் இருந்து வெளியில் வந்துவிட்டு, எனது மனைவியிடம் வந்து சொன்னார். இப்படித்தான் ஆன்லைன் குற்றங்கள் தொடங்குகின்றன. இதுவும் ஒரு சைபர் குற்றம் தான். எனவே 7வது வகுப்பிலிருந்து 10வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சைபர் வகுப்புகளுக்கு வகை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். வாரத்தில் ஒருநாள் சைபர் வகுப்புகள் நடத்தி இணையத்தளக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இணையத்தளக் குற்றங்கள் தெருக்களில் நடக்கும் குற்றங்களை விடப் பெரிய குற்றமாக மாறக்கூடும். எனவே சைபர் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது அவசியம். பள்ளிப் பாடத்திட்டத்தில் சைபர் கல்வியைச் சேர்ப்பதன் மூலம் வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை ராணி முகர்ஜி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், டிஜிபி ரேஷ்மி சுக்லா உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest