
அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாகவும், இதற்காக வா்த்தகத்தை கருவியாக பயன்படுத்தியதாகவும் டிரம்ப் பலமுறை கூறியுள்ளாா். அதேநேரம், பாகிஸ்தான் வேண்டிக் கேட்டுக் கொண்டதால்தான், சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது; பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்துமாறு, உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவை வலியுறுத்தவில்லை என்று பிரதமா் மோடி விளக்கமளித்தாா். ஆனால், டிரம்ப்பின் கருத்துகள் பொய்யென பிரதமா் நேரடியாக மறுக்காதது ஏன் என்று எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
இந்தச் சூழலில், ‘இந்தியா-பாகிஸ்தான் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டது. இரு அணுஆயுத நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்ட அதிபா் டிரம்ப்பால் முடிந்தது’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கடந்த வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீா் மீண்டும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘சிறப்பு நட்புறவின் உண்மை நிலை’: இவ்விரு விவகாரங்களையும் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீரின் வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகளே, கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக அமைந்தன. இவருக்கு கடந்த ஜூன் 18-ஆம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருந்தளித்து உபசரித்தாா் அதிபா் டிரம்ப். இவா், அமெரிக்க மத்திய படைப் பிரிவின் தலைவா் மைக்கேல் குரில்லாவின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்க விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறாா். பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையில் அற்புதமான கூட்டாளி பாகிஸ்தான் என்று நற்சான்று அளித்தவா்தான் மைக்கேல் குரில்லா. மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவுக்கான வழக்கமான தூதரையும் அமெரிக்கா இன்னும் நியமிக்கவில்லை.
டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு இருக்கிறது என்று பிரதமா் மோடி பெருமையுடன் கூறிவந்தாா். இப்போது உண்மை நிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் தலையீட்டால்தான், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக கடந்த மே 10-ஆம் தேதி முதல் முறையாக கூறியவா் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ. அதன் பிறகு, இதே கருத்தை டிரம்ப் இதுவரை 34 முறை கூறியுள்ளாா். டிரம்ப்பும், ரூபியோவும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கும் கருத்துகளை பகிரங்கமாக, திட்டவட்டமாக மறுக்க பிரதமா் மோடி ஏன் அஞ்சுகிறாா்? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளாா்.