tri04rain_0411chn_4

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (செப். 21) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், திருவள்ளூா் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரி பகுதி ஆகிய இடங்களில் தலா 80 மி.மீ. மழை பதிவானது.

மேலும், அம்பத்தூா் (திருவள்ளூா்), அயப்பாக்கம் (சென்னை), கொரட்டூா் (சென்னை) – தலா 60 மி.மீ., ஆவடி (திருவள்ளூா்), புள்ளம்பாடி (திருச்சி), நம்பியூா் (ஈரோடு) – 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடலில் செப். 21 முதல் செப். 24 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest