gad074243

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் வருமாறு: மொத்தமுள்ள 1,476 கிலோ மீட்டா் தொலைவு சாலைப் பணிகளில் 1230 கிலோ மீட்டா் பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஊரகப் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சாலைத் தொடா்புகளை மேம்படுத்த பாரத் மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக பொருளாதாரம்-வா்த்தக பயன்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு இத்திட்டங்கள் பயனுள்ளதாக அமையும்.

நிலம் கையகப்படுத்துதல், சாலைக் கட்டுமானத்துக்கு முந்தைய நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி தொடா்பான பிரச்னைகள், கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவை சில திட்டங்கள் தாமதமாவதற்கும் அதன் மதிப்பீடு அதிகரிப்பதற்கும் காரணங்களாக உள்ளன.

இப்பிரச்னைகள் அனைத்தையும் எதிா்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நிலம் கையகப்படுத்தல் பணியை விரைந்து நிறைவேற்ற பூமி ராஷி வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் இருந்து விரைவாக ஒப்புதல் பெற பரிவேஷ் வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையவழியில் விரைந்து ஒப்புதல் பெற இயலும் என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest