
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த விரிவான நேர்காணலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்துப் பதிலளித்தார் அமித் ஷா.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும் சில கேள்விகளும் அமித் ஷா அளித்த பதில்களும்…
மொழி மற்றும் மொழி கல்விக்காக நாம் ஏன் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்?
எங்களைப் பொருத்தவரை எந்த சண்டையும் கிடையாது. எங்களிடம் உறுதியான கொள்கை இருக்கிறது. இந்தியா, இந்திய மொழிகளிலே இயக்கப்பட வேண்டும். மாறாக இந்தியா, வெளிநாட்டு மொழிகளில் இயங்க வேண்டும் என்று நம்புபவர்களுடன்தான் எங்களுடைய போராட்டமே. உதாரணமாக சீனாவைச் சொல்லலாம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ரஷியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
அனைத்து இந்திய மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். தென் மாநிலங்கள் அவற்றின் சொந்த மொழிகளில் இயங்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தெலுங்கிலும் தமிழ்நாடு தமிழிலும் கேரளம் மலையாளத்திலும் இயங்க வேண்டும். ஏனெனில் அங்கு ஹிந்தியின் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இல்லை.
ஹிந்தி மொழி பற்றி…
அனைத்து இந்திய மொழிகளையும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சிஏபிஎஃப் கான்ஸ்டபிள் தேர்வை நாங்கள் 13 மொழிகளில் நடத்தியுள்ளோம். ஜேஇஇ, நீட், யுஜிசி தேர்வுகளை 12 மொழிகளில் நடத்தியிருக்கிறோம். புதிய தேசிய கல்விக்கொள்கை, முதன்மை, தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியை உள்ளூர் மொழிகளில் வழங்க உதவுகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன செய்தார் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். மொழி பிரச்னை அங்கு எப்படி இருக்கிறது?
இந்திய மொழிகள் என்று நான் சொல்லும்போது அதில் தமிழும் இருக்கிறது. நான் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்ல வேண்டியது இதுதான். தமிழில் மருத்துவக் கல்வியை கற்றுக்கொடுங்கள். அதை ஏன் செய்யக்கூடாது? பொறியியல் படிப்பை தமிழில் கற்றுக்கொடுங்கள். அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது? தமிழில் கற்பிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றால் எனக்கு அதில் பிரச்னை இருக்கிறது.
தவெக தலைவர் விஜய் உங்களுடன் சேர வாய்ப்பு உள்ளதா? அல்லது பாமக மற்றும் சிறிய கட்சிகள் உங்கள் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா? இல்லையெனில், அது பலமுனைப் போட்டியாக இருக்கும்.
இப்போது அதைச் சொல்ல முடியாது. அந்தக் கட்சிகளை எல்லாம் ஓரணியில் கொண்டுவர நாங்கள் முயற்சிப்போம்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னை என்ன?
திமுக ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத பரவலான ஊழல். ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழல் அடங்கிய நீண்ட பட்டியலே இருக்கிறது.
ரூ. 39,775 கோடிக்கு மதுபான ஊழல் நடந்துள்ளது. மதுபான விற்பனை உரிமங்களில் முறைகேடுகள், மதுக்கடை டெண்டர்கள், மதுவுக்கு அதிக கட்டணம் வசூலித்தல், சட்டவிரோத விற்பனை, மது பாட்டில் கொள்முதல் மோசடி ஆகியவை இதில் அடங்கும்.
ரூ. 5,800 கோடி மணல் சுரங்க ஊழல்: 4.9 ஹெக்டேர் மட்டுமே சுரங்கம் வெட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் 105 ஹெக்டேர் வெட்டப்பட்டது. இது 30 மடங்கு அதிகம்.
எரிசக்தி ஊழலில் திமுக வழங்கிய ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 4,400 கோடி முறைகேடு நடந்துள்ளது.
பொது நிறுவன பங்குகள் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது உள்பட எல்காட் நிறுவனத்தில் ரூ. 3,000 கோடி ஊழல்.
போக்குவரத்துத் துறையில் போலி வாகன சான்றிதழ் வழங்கியதில் ரூ. 2,000 கோடி ஊழல்.
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் போலி லெட்டர்ஹெட், நிறுவனங்கள், முகவரிகள் மூலம் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் ரூ.600 கோடி ஊழல்.
ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக, பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம் அதன் உண்மை விலையைவிட 4–5 மடங்கு அதிக விலைக்கு வாங்கி ரூ. 450 கோடி ஊழல் நடந்துள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது இலவச வேஷ்டி – சேலை வழங்குவதில் ரூ.60 கோடி முறைகேடு.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனிநபர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து பண மோசடி நடந்துள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ. 41,503 முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து திமுகவில் குழுவாக செயல்படுகிறார்கள். மாநில தலைமைச் செயலகத்திற்கு வெளியே அதிகார மையம் இருக்கிறது. ஸ்டாலினின் மருமகன் சபரீசனைப் பின்பற்றுவதா அல்லது மகன் உதயநிதியைப் பின்பற்றுவதா அல்லது கனிமொழி அல்லது வேறு யாரையாவது பின்பற்றுவதா என திமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால்தான் திமுக ஒன்றுமில்லாத பிரச்னைகளை உருவாக்க முயற்சிக்கிறது.
தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு எழுப்பும் பிரச்னைகளை நீங்கள் எப்படி சரி செய்வீர்கள்? ஜிஎஸ்டி மற்றும் 15-வது நிதி ஆணையத்தின் கீழ் வரி பகிர்வு மாற்றங்களுக்குப் பிறகு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி?
இந்தியா கூட்டணி, நிதியை தவறாகக் கையாள்வதை மறைப்பதற்காக உருவாக்கிய பொய்கள் இவை.
மோடி அரசு ஒரு முழுமையான வளர்ச்சி முறையை பின்பற்றுகிறது. உண்மையில் தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி கணிசமாக அதிகரித்துள்ளது. வரி பகிர்வின் கீழ் 5 தென் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 3,55,466 கோடியிலிருந்து ரூ. 10,96,754 கோடியாக உயர்ந்துள்ளது. இது 209 சதவீதம் அதிகம்
தொகுதி மறுசீரமைப்பு பற்றி…
தென் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு பிரச்னையையும் நாங்கள் சரிசெய்வோம் என்று நான் திட்டவட்டமாக கூறியிருக்கிறேன். கண்டிப்பாக எந்த அநீதியும் இருக்காது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்டம் இன்னும் வரவில்லை. பிறகு ஏன் அவர்கள் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஏனென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது. எனவே இது அரசியல் சார்ந்தது. தொகுதி மறுசீரமைப்பு, சட்டமாக மாறுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.