
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது சரியான தகவலே! ஆனாலும், ஒன்றை அவர் உணரவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்தநிலையில், மத்தியில் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணியைவிட தமிழ்நாட்டுக்கு பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்நாட்டுக்கு கடந்த 11 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த காலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கியிருந்ததைவிட மும்மடங்கு அதிகம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பத்தாண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியுடன், கடந்த 11 ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டுப் பார்த்துள்ளார் பிரதமர். அவர் சொல்வதெல்லாம் சரியே. ஆனாலும், இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லையே.!
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது, வருடாந்திர பட்ஜெட்டும் அதிகரிக்கவே செய்யும். மொத்த செலவினம்(நிதி ஒதுக்கீடு உள்பட) அதிகரிக்கவே செய்யும்.. உதாரணமாக, 2013 – 14 (ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்கீழ்) மொத்த செலவினம் மற்றும் 2024 – 25 (தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்கீழ்) மொத்த செலவினம் இவற்றின் தரவுகளைக் கவனித்தால்,
2013 – 14 : ரூ. 15,90,434 கோடி
2024 – 25 : ரூ. 47, 16, 487 கோடி என்பதை அறியலாம்.
அரசின் மொத்த செலவினம் 3 மடங்கு அதிகரித்திருக்கும்போது, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடும் 3 மடங்கு அதிகரிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
இயல்பாகவே இப்போதைய நிலவரத்திலிருந்து அடுத்த 10 அல்லது 11 ஆண்டுகளுக்குப் பின்னர், நிதி ஒதுக்கீடானது 3 மடங்கு அல்லது அதற்கும் மேல் அதிகரிக்கவே செய்யும்’ என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முடிந்து அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருச்சி கிளம்பினார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் மாலை தில்லிக்குப் புறப்பட்டார்.