thiruchendur-temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் அமைந்துள்ள புராதன சிறப்புமிக்க பஞ்சலிங்கத்தை வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கக் காலத்தில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது வரை தொடர்கிறது. மேலும், பஞ்சலிங்கத்துக்கு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறவில்லை.

எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள பஞ்சலிங்கத்துக்கு முறையாக பூஜைகள் நடத்தவும், பஞ்சலிங்கத்தை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ”திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தால் கூட்டத்தை நெறிப்படுத்தலாம். இதற்காக தரிசனத்தை மறுப்பது ஏற்புடையதல்ல. பக்தா்கள் வருகை குறைவாக இருக்கும் நேரத்தில் பஞ்சலிங்க தரிசனம் அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து கோயில் இணை ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

இந்த வழக்கு இன்று(செப். 22) விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வில், கோயில் நிர்வாகம் இன்று(செப். 22) பதில் மனு தாக்கல் செய்தது.

இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பாதுகாப்புக்காக, கூட்டம் குறைவாக இருந்தால் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதியும், கூட்டம் அதிகமாக இருந்தால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கூட்டத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கக்கூறிய கோயில் நிர்வாகத்தின் முடிவை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்ற அமர்வு.

இதையும் படிக்க: தில்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! காரணம் என்ன?

Devotees have been allowed to have Panchalinga Darshan at the Thiruchendur Temple.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest