newindianexpress2024-12-13z68tgbyhC531CH148037419817

தில்லியில் ஒரே நாளில் சுமார் 45 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

தில்லியில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்கள் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், இன்று (ஜூலை 18) ஒரே நாளில் தில்லி முழுவதுமுள்ள சுமார் 45 பள்ளிக்கூடங்களுக்கும், 3 கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்கள் அனுப்பிய மின்னஞ்சல்களில், பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் ட்ரைநைட்ரோடோலூயீன் எனப்படும் வேதியல் பொருளின் மூலம் தயார் செய்யப்பட்ட ஏராளமான வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக பள்ளிக்கூடங்களில் இருந்து குழந்தைகள் உள்பட அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனால், தில்லி நகரம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர்.

இந்தச் சோதனைகளில், சந்தேப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைபர் கிரைம், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், துவாரகா, ரோஹினி, பிதம்புரா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுடன், இந்திரபிரசாதா பெண்கள் கல்லூரி, இந்து கல்லூரி மற்றும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பேசிய தில்லியின் முன்னாள் முதல்வர் அதீஷி, ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலியல் பலாத்காரம்! கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest