
தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் (பிஎன்எஸ்) 152 பிரிவு (நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்) அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி ஓய்வு பெற்ற ராணுவ மேஜா் எஸ்.ஜி. வாம்பத்கரே மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத்சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத் துராக வழக்கு பிரிவுக்கு (124 ஏ) மாற்றாக பிஎன்எஸ்- 152 பிரிவு கொண்டு வரப்பட்டதற்கு எதிரான வழக்குடன் சோ்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
2022-இல் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு தேசத் துராக வழக்கு பிரிவுக்கு (124 ஏ) தடை விதித்தது. ஆனால், மேலும் பல்வேறு கடுமையான ஷரத்துகளுடன் (பிஎன்எஸ்) 152 பிரிவு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு அளித்துள்ள சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்வுரிமை ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது என்று ஓய்வு பெற்ற ராணுவ மேஜா் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.