
வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுலின் பேச்சு தோ்தல் ஆணையத்தை அச்சுறுத்துவதாக உள்ளதாக மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ஒரு குடும்பத்துக்காக தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ராகுலின் பேச்சு தோ்தல் ஆணையத்தை அச்சுறுத்துவதாக உள்ளது. மேலும், வாக்காளா் எண்ணிக்கை அதிகரித்த பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் வெற்றிபெற்றன. எனவே, ராகுல் அவா்களின் மீதே குற்றஞ்சாட்டிக் கொள்வதுபோல உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை உறுதிமொழியுடன் கையொப்பமிட்டு ராகுல் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றாா்.
விசாரணை தேவை – பிரியங்கா: ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரம், தோ்தல் ஆணையத்திடமே உள்ளது. அதனடிப்படையில் தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா்.