14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை இன்று (டிச.17) பார்வையிட்டிருக்கிறார்.
விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுப் பண்டங்களை அளித்திருக்கிறார்.

லியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
மேலும் வந்தாரா மையத்தில் நடைபெற்ற சில பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்துகொண்டிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மெஸ்ஸி, “வந்தாரா செய்யும் பணிகள் உண்மையிலேயே அழகானது.
விலங்குகளுக்கான பராமரிப்பு, அவை மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் விதம் ஆகியவை மிகவும் ஈர்க்கக்கூடியவை.

நாங்கள் இங்கு அற்புதமான நேரத்தைச் செலவிட்டோம். எங்களின் பயணம் முழுவதும் மிகவும் நிம்மதியாக உணர்ந்தோம்.
இது எங்கள் மனதில் நீங்காத ஒரு அனுபவமாக இருக்கும். இந்த அர்த்தமுள்ள பணிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க நாங்கள் நிச்சயமாக மீண்டும் இங்கு வருவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.





