vijay-5

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணம், 41 மரணங்களுடன் சோகமான நிகழ்வாக முடிவடைந்திருக்கிறது. இந்த அசம்பாவிதத்திற்கு தவெக-வின் முறைப்படுத்தப்படாத செயல்பாடுகளும் விஜய்யின் கால தாமதமும்தான் காரணம் என்று அரசு தரப்பு சொல்கிறது.

நாங்கள் கேட்ட இடத்தை அரசு வழங்காததும், போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்காததும்தான் காரணம் என்று தவெக தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதுதொடர்பாக தனி நபர் ஆணையமும், நீதிமன்றமும் விசாரித்து வருகிறது.

சர்ச்சைகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு இதுதொடர்பாக உளவியல் ஆலோசகர் சிந்து மேனகாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

“தவெகவினரே வலியுறுத்தியும் விஜய்யைக் காண பெண்கள், குழந்தைகள் வருவதை எப்படிப் புரிந்துகொள்வது?”

“வருவது சாதாரண அரசியல் தலைவராக இருந்தால் பரவாயில்லை. ஒரு பெரிய ஹீரோவாக உச்சத்தில் இருந்தவர். மக்களைச் சந்திக்க வரும்போது, பொதுமக்கள் முதலில் அவரை ஒரு தலைவராகப் பார்க்க மாட்டார்கள். நாம் திரையில் பார்த்து ரசித்த ஹீரோ நம்ம ஊருக்கு வருகிறார். அவரை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும். அவர் நேரில் எப்படி இருக்கிறார், எப்படிப் பேசுகிறார், எப்படி நடக்கிறார்? என்று பார்க்க எல்லாருக்குமே ஆசை இருக்கும்.

அதற்கான கூட்டமாகத்தான் அவர்கள் அங்கே கூடுவார்கள். அரசியல் சார்ந்து வருகிறவர்கள் தனி. ஆனால், அவரை ஹீரோவாக நினைத்து பார்க்க வருபவர்கள்தான் அதிகம். இதனை நாயக வழிபாடு என்று குறிப்பிடலாம். கடவுளின் அருளுக்காக கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் போல, தனக்குப் பிடித்த ஹீரோவைப் பார்க்க தண்ணீர் இல்லாமல், சாப்பிடாமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கவும் அவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

அதெல்லாம் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக. இப்படி, ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே செலுத்தப்படும் அன்பு. இதனை Parasocial attachment என்று சொல்வோம்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்
விஜய் பிரசாரம்
விஜய் பிரசாரம்

“காலம் முன்பைப் போல இல்லை. இப்போது எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. நேரில் பார்ப்பதைவிட போனில் இன்னும் நெருக்கமாகப் பார்க்க முடியும். ஆனாலும், கூட்டத்துக்குள் வருகிறார்களே?”

“போனில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. `இவ்வளவு காலம் திரையிலேயே பார்த்த விஜய்யை, நேர்ல பாத்துட்டோம்ப்பா’ என்று தனக்குத் தெரிந்தவர்களிடத்திலும் சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு ஒரு பெருமை.

அது அவர்களுக்கு ஒரு நிறைவைத் தருகிறது. அப்படியான எண்ணத்துடன்தான் அங்கே வந்திருப்பார்கள். அதுமட்டுமல்ல, இதில் கும்பல் மனநிலையும் இருக்கிறது. இந்தக் கூட்டத்துக்குத் தனி ஆளாக வருபவர்களைவிட, குடும்பத்துடனோ, அக்கம் பக்கத்து வீட்டாருடனோ, நண்பர்களுடனோ சேர்ந்து ஒரு குழுவாகத்தான் வருபவர்கள்தான் அதிகம்.

இப்படி ஒரு கூட்டத்தில் இருக்கும்போது ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பட்ட இயல்பை மறந்துவிடுவார்கள். தனி ஆளாக யாரும் சிந்திக்க மாட்டார்கள். அந்தக் கூட்டத்தில் என்ன உணர்ச்சி இருக்கிறதோ, எல்லோரும் எப்படிச் செயல்படுகிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல்தான் எல்லோரும் செயல்படுவார்கள்.

இங்கே அசம்பாவிதம் நடக்கும் நம்மால் இங்கிருந்து வெளியேற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதையெல்லாம் அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஒருசிலருக்கு வெளியேறும் மனநிலை வந்தாலும், `இவ்வளவு நேரம் இருந்துட்டோம். இன்னும் அரை மணி நேரம்தானே, இன்னும் ஒரு மணி நேரம்தானே’ என்ற தங்களைத் தாங்களே சமாளித்துக்கொண்டு அங்கேயே இருந்துவிடுவார்கள். கரூர் அசம்பாவிதத்திலும் இதுதான் நிகழ்ந்திருக்கக் கூடும்”

“தங்களுக்குப் பிடித்த ஹீரோவை நேரில் பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மரத்தில் ஏறுவது பஸ்ஸில் பின் தொடர்வது, மின் கம்பங்களில் ஏறுவது என்று எல்லை மீறுவதை எப்படி எடுத்துக்கொள்வது?”

Chindhu menaka, psychologist
Chindhu menaka, psychologist

“சினிமாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி களத்துக்கும் வந்துவிட்டார். ஆனால், மக்களைப் பொறுத்தவரை அவரை அரசியல் தலைவராக எடுத்துக்கொண்டார்களா என்பது கேள்விக்குறிதான். அவர் படத்துக்குப் போகும்போது, எப்படி கட் -அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து, எப்படி உணர்ச்சிப் பெருக்கோடு கொண்டாடுகிறார்களோ… அதே மனநிலையில்தான் அரசியல் கூட்டத்துக்கும் வருகிறார்கள்.

ஏனென்றால் இப்போதுவரை விஜய் பெரிய ஸ்டாராகத்தான் நம மனதில் பதிவாகியிருக்கார். அவர் தன்னை அரசியல் தலைவரா முன்னிறுத்திக்கொள்வதற்கும் அவரை அரசியல் தலைவராக மக்கள் கிரகித்துக்கொள்வதற்கும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும்”

“மக்கள் மனநிலையும் ரசிகர்கள் மனநிலையும் இப்படி இருக்கையில், தவெக தலைவர் விஜய் அவர்கள் இதை எப்படிக் கையாள வேண்டும். இந்த விஷயத்தில் விஜயகாந்த் தன் தொண்டர்களைக் கட்டுப்படுத்திய விதத்தைச் சொல்லி விஜய் விமர்சிக்கப்படுகிறாரே?”

“பொத்தம்பொதுவாக அப்படிச் சொல்லிவிட முடியாது. விஜய்யும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுதான் களத்துக்கு வந்திருப்பார். ஆனால், அதை மக்களிடம் செயல்படுத்துவதில் வேண்டுமானால் இருவருக்கும் வித்தியாசம் இருக்கலாம்.

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிகர் சங்கத்தில் பதவி வகித்தவர். மக்களை எப்படிச் சந்திக்க வேண்டும், அவர்களை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும், பிரச்னைகளை எப்படிக் கையாள வேண்டும் ஆகியவற்றில் அவருக்கு ஏற்கனவே படிப்பினை இருந்தது. ஆனால், விஜய்க்கு அப்படியான படிப்பினை இல்லை. அவர் களத்திற்குப் புதிதாக வருகிறார். அப்படி வரும்போது இதை ஒழுங்குபடுத்துவதற்கும் எதிர்கொள்வதற்குமான செயல்திறனை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும்”

இந்த பேட்டியை முழுமையாகப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest