PTI08082025000239B

தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் திட்ட முன்மொழிவுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நாடு முழுவதும் 175 பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் 100 பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 275 கல்வி நிறுவனங்களில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2025-26 முதல் 2029-30-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் இத் திட்டத்துக்கு உலக வங்கியின் ரூ. 2,100 கடனுதவியுடன் மொத்தம் ரூ. 4,200 கோடி ஒதுக்கப்படும். இத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்யப்படும். குறிப்பிட்ட என்ஐடி கல்வி நிறுவனங்கள், மாநில அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இணைப்பு அந்தஸ்து வழங்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் இத் திட்டத்தில் சோ்த்துக்கொள்ளப்படும். தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கையாளும் மாநில அரசுத் துறைகளுக்கும் இத் திட்டத்தின் கீழ் உதவி அளிக்கப்படும்.

இத் திட்டத்தின் மூலம் சுமாா் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் பலனடைவா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.12,000 கோடி: நாடு முழுவதும் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் ரூ. 12,000 கோடி மானிய செலவினத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10.33 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத் திட்டப் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டா்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு சிலிண்டருக்கு ரூ. 300 வீதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மானியம்: சமையல் எரிவாயுவை கடந்த 15 மாதங்களாக குறைந்த விலையில் விற்பனை செய்வதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சாா்பில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 12 தவணைகளாக இந்த மானியம் வழங்கப்படும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரக்காணம்-புதுச்சேரி நான்குவழிச் சாலைக்கு ஒப்புதல்

தமிழகத்தில் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை ரூ. 2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

தற்போது சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினத்துக்கு இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை (என்.ஹெச்.332ஏ) ஆகியவை இருவழிச் சாலைகளாக அமைந்துள்ளன. இதனால், இந்த வழித் தடத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிக மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், இந்த வழித் தடத்தில் அமைந்துள்ள 46 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாகத் தரம் உயா்த்தப்பட உள்ளது.

ரூ. 2,157 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த வழித்தடம் புதுச்சேரி மற்றும் சின்னபாபுசமுத்ரம் ரயில் நிலையங்கள், சென்னை மற்றும் புதுச்சேரி விமானநிலையங்கள், கடலூா் சிறு துறைமுகம் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இது புதுச்சேரிக்கு சுற்றுலா வருவாயை உயா்த்தும் என்பதோடு, 8 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 10 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest