
ஒருவர் கையில் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால், அது கிட்டத்தட்ட பாக்கெட்டிலேயே உளவாளியை வைத்துக்கொண்டிருப்பதற்கு சமம் என்கிறது சைபர் நிபுணர்களின் கூற்று.
ஒருவர் செல்போனில் சார்ஜ் முழுமையாக ஏற்றிவிட்ட சில நிமிடங்களில், அல்லது சற்று நேரம் கழித்து, அதில் திடீரென 20 சதவீத சார்ஜ் குறைந்திருந்தால், உங்கள் போனை நீங்கள் பயன்படுத்தாத போதிலும் அது சூடேறிக் கொண்டிருந்தால்.
இதைப் பார்த்ததும், ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று அலட்சியம் செய்யலாம். ஆனால் சைபர் பாதுகாப்பு நிபுணர்களோ, இவை நமது ஸ்மார்ட்போன்களுக்குள் இருக்கும் மிகவும் மோசமான மென்பொருளின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் – அது உளவு மென்பொருள் அல்லது ஸ்பைவேர் போன்று.
வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில், ஸ்மார்ட்ஃபோன் என்பது ஒருவரது தனிப்பட்ட அத்தியாவசிய உடைமையாக உள்ளது. ஆனால், அதுவே அவரைக் கண்காணிக்கிறது என்றால்? அந்த செல்ஃபோனில், தனிப்பட்ட உரையாடல்கள், நிதி நிலைமை, அலுவலக மின்னஞ்சல், நீங்கள் எங்கெல்லாம் சென்றுவந்தீர்கள் என்ற லோகேஷன் வரலாறும் பதிவாகியிருக்கும். ஒருவேளை, அந்த தகவல்களை ரகசியமாக யாரேனும் கண்காணித்தால்?
பாக்கெட்டில் வைத்திருக்கும் உளவாளி
ஸ்பைவேர் என்பது, ஒருவரது செல்போன் மூலம், அவரை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மோசமான மென்பொருள். இதைக் கொண்டு, செல்போனில் டைப் செய்வதை, அவர் எங்கெல்லாம் செல்கிறார், போன் அழைப்புகளில் பேசுவதை பதிவு செய்வது அல்லது செல்போனில் இருக்கும் மைக்ரோஃபோனை இயக்குவது, ஒருவருக்குத் தெரியாமலேயே அவரது செல்போனில் இருக்கும் கேமராவை இயக்குவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
சில ஸ்பைவேர் மென்பொருள்கள், மிகவும் நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டு, டார்க் இணையதளங்கள் அல்லது பெற்றோருக்கான கண்காணிப்புக்கு அல்லது ஊழியர்களை கண்காணிப்பதற்கான டூல் என்ற பெயரில் நேரடியாக விளம்பரம் செய்து சட்டப்படி விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. மற்ற ஸ்பைவேர் மென்பொருள்களை யாராவது ஒருவர் செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால், இதுபோன்ற ஸ்பைவேர்களை, செல்போனின் பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் தகர்த்து, ஹேக்கர் அல்லது இந்த நிறுவனத்துக்காக வேலை செய்பவர்களே தேவைப்படும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தும்விடுவார்கள்.
அறிகுறிகள் இதுதான்! அலட்சியம் வேண்டாம்!!
உங்கள் செல்போனில் இதுபோன்ற ஸ்பைவேர் இருந்தால் அதற்கான அறிகுறிகளை அறிந்துகொள்ளுங்கள். அவற்றை அலட்சியம் செய்யாதீர்கள்.
ஒரு செல்போனில் இதுபோன்ற மென்பொருள் இருந்தால் அதற்கான அறிகுறிகள் என்று சைபர் நிபுணர்கள் ஒரு சில விஷயங்களை பட்டியலிட்டுள்ளனர்.
1. திடீர் திடீரென செல்போனில் உள்ள செயலிகள் செயலற்று நிற்கும் அல்லது செல்போனின் இயங்கும் வேகம் குறைந்துவிடும்.
2. ஸ்பைவேர் 24/7 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதால் செல்போனில் சார்ஜ் வேகமாகக் குறையும்.
3. செல்போனில் அளவுக்கு அதிகமான டேட்டா பயன்பாடு இருக்கும். ஸ்பைவேர், செல்போனிலிருந்து கிடைக்கும் தகவல்களை வேறு யாருக்கோ அனுப்பிக்கொண்டிருக்கலாம்.
4. பயன்படுத்தாத போதும், செல்போன் சூடேறுகிறது என்றால், அதற்குள் இதுபோன்ற ஏதோ ஒன்று இயங்கிக் கொண்டிருக்கலாம்.
5. அர்த்தமற்ற குறுஞ்செய்திகள், தகவல்கள் புரியாத சமிக்ஞைகளுடன் கிடைக்கப்பெறலாம்.
6. தேவையற்ற செயலி அல்லது செட்டிங்கில் மாற்றம் ஏற்படுவதும் நிகழலாம். ஸ்பைவேர் மென்பொருள் அதற்குத் தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்யும் அபாயம் உண்டு.
7. திடீரென கேமரா விளக்குகள் எரிவது, செல்போனில் பேசும்போது, தொடர்ச்சியாக ஒலி கேட்பது சாதாரண நிகழ்வு அல்ல.
ஸ்பைவேர் கண்டுபிடித்து நீக்குவது எப்படி?
இந்த அறிகுறிகளில் பல அல்லது அதிகமானவை ஒரு செல்போனில் இருந்தால், உடனடியாக ஸ்பைவேர் இருக்கிறதா என்று கண்டுபிடித்தாக வேண்டும்.
இது செல்போன் மாடலுக்கு ஏற்ப மாறுபடும்.
ஆன்டிராய்டு பயனர்களுக்கு..
-
செட்டிங்ஸ் சென்று அதில் ஆப்ஸ் (செயலி) என்பதை கிளிக் செய்து, செல்போனில் இருக்கும் உங்களுக்குத் தெரியாத செயலிகளை கண்டறியுங்கள்.
-
டிவைஸ் அட்மின் செயலிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதி பட்டியலைப் பாருங்கள்.
-
செல்போனில் ஆன்டி-ஸ்பைவேர் செயலிகளை (Malwarebytes, Avast) இன்ஸ்டால் செய்து செல்போன் முழுவதையும் ஸ்கேன் செய்யவிடுங்கள்.
-
சேஃப் மோட் என்பதற்கு செல்போனை மாற்றி, மூன்றாம் தரப்பு செயலிகள் இல்லாமல் செல்போன் சாதாரணமாக இயங்குகிறதா என்பதை பரிசோதிக்கவும்.
-
செல்போனில் இருக்கும் டவுன்லோடு மேற்றும் கோப்புகளையும் சரிபார்க்கவும்.
-
கூகுள் பிளே புரொடக்ட் எனாபிளிலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.
ஐஃபோன் பயனாளர்களுக்கு..
ஆப்பிள் போனின் பாதுகாப்புத் திறனுக்குள் ஊடுருவுவது இயலாது, ஆனால் செய்ய முடியாத காரியமல்ல. ஜெயில்பிரேக் இயக்கத்தில், ஒரு செல்போனின் தயாரிப்பாளர் உருவாக்கிய அனைத்து பாதுகாப்பு மென்பொருள் தளங்களையும் நீக்கிவிட்டு, பயனாளர் தனது இயங்கு தளத்திடம் முழுக் கட்டுப்பாட்டையும் கொடுத்து, எந்த அதிகாரப்பூர்வ செயலி தளங்களிலிருந்தும் இல்லாமல் வெளியே இருந்தும் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும்?
-
செட்டிங்ஸ் செல்லவும்.
-
செயலிகளுக்குக் கொடுத்திருக்கும் அனுமதிகளை பிரைவசி & செக்யூரிட்டியில் சென்று பரிசோதிக்கவும்.
-
விபிஎன் & டிவைஸ் மேனேஜ்மென்ட் கீழிருக்கும் தெரியாத புரொஃபைல்களை பார்க்கவும்.
-
பேட்டரி மற்றும் டேட்டா பயன்பாட்டை ஆய்வு செய்யவும்.
-
எப்போதும் புதிய ஐஓஎஸ் அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
-
பெரும்பாலும், பழைய ஐஓஎஸ் அமைப்புகளை ஸ்பைவேர் மென்பொருள் சீர்குலைத்துவிடும்.
முன்னெச்சரிக்கையே சரியான வழி
செல்போனில் ஸ்பைவேர் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டால் அதனைக் கண்டுபிடித்து நீக்குவது கடினம். எனவே, முன்னெச்சரிக்கையாக செயல்படுவதே சிறந்தது.
பிளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
குறுஞ்தகவல், குறுஞ்செய்திகளில் வரும் சந்தேகத்துக்குரிய லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்துவிட வேண்டாம்.
உங்கள் தேவைக்காக செல்போனை ரூட் செய்தல் அல்லது ஜெயில்பிரேக் செய்ய வேண்டாம். அது பாதுகாப்பு அம்சங்களை உடைத்துவிடும்.
செல்போனில், கடினமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்தவும்.
பொது வை-ஃபையைப் பயன்படுத்தும்போது ஆன்லைன் வங்கிச் சேவை போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.
ஸ்பைவேர் இருக்கிறது என்பதை உறுதி செய்துவிட்டால் ஃபேக்டரி ரீசெட் கொடுத்து அனைத்தையும் நீக்கிவிட்டு புதிதாக பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள். இதுவே நல்ல வழி.
டிஜிட்டல் முறையில் உளவு பார்ப்பது மிக மோசமான நிலைமைக்கு மாறிவிட்ட இந்த உலகில், விழிப்புணர்வுடன் இருப்பதில் தவறொன்றும் இல்லை. அது தற்காப்புதான். ஏனென்றால், மாறிவிட்ட டிஜிட்டல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, யாரோ ஒருவர் நம்மை எங்கிருந்தோ கண்காணித்துக் கொண்டிருக்கலாம், அதுவும் நமக்குத் தெரியாமல்..
In today’s hyper-connected world, smartphones have become our most personal devices—storing everything from intimate chats and financial data to work emails and location history. But what if someone else was secretly looking in?
இதையும் படிக்க.. செம்மணி: தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்! யார் இவர்கள்?