kashmir

மணிப்பூரின் சுராசந்த்பூா் மற்றும் காங்போக்பி மாவட்டங்களை இணைத்து குகி பழங்குடியினா் ‘டைகா்’ சாலையை அமைத்து வருவதற்கு எதிராக மலை அடிவார பகுதி நாகா பழங்குடி கூட்டமைப்பினா் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

இதனால், அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘டைகா்’ சாலை அமைக்கும் பணியானது, சுராசந்த்பூா், காங்போக்பி ஆகிய இரு மாவட்டங்களையும் இணைப்பதற்காக குகி பழங்குடி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் ஒரு தன்னாா்வ முயற்சியாகும். எனினும், இந்தச் சாலை நாகா பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, நாகா பழங்குடி மக்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மாக்கன் மற்றும் நோனி மாவட்டத்தில் உள்ள டோங்ஜெய் மரில், டோலாங் சிரு, துப்புல்-நோனி சந்திப்பு மற்றும் லாங்சாய்-கௌப்பும் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரா்கள் சனிக்கிழமை சாலை மறியல் நடத்தினா். மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள குகி போராளி குழுக்களின் முகாம்களை நாகா பகுதிகளில் இருந்து அகற்றுமாறும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு கிழக்கு லியாங்மாய் நாகா தலைமைச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நாகா பழங்குடி மக்களின் முக்கிய அமைப்பான இச்சங்கம், நாகா பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், இப்பகுதிகளின் சாலைகள், இடங்களின் பெயரை மாற்ற நடைபெறும் முயற்சிகள் குறித்தும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றங்கள் பொருத்தமற்றவை மட்டுமல்லாமல் நாகா பழங்குடி மக்களின் கலாசார, வரலாற்று மற்றும் பிராந்திய உரிமைகளை மீறுகின்றன என்று இச்சங்கம் தெரிவித்கது. மேலும், இதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் எச்சரித்தது.

மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடி சமூகத்தினா் 2023-இல் முன்னெடுத்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, கடந்த 2 ஆண்டுகளாக நீடித்தது. தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடக்கும் அங்கு மீண்டும் அமைதியை மீட்டெடுக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest