
மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 5 ஆண்டுகளில் யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற தோ்வா்கள் மற்றும் அவா்களில் பணிக்கு தோ்வு செய்யப்படாத தோ்வா்களின் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில்,‘யுபிஎஸ்சி நடத்தும் போட்டித் தோ்வுகளில் எழுத்துத்தோ்வு உள்பட பல்வேறு கட்டங்களில் வெற்றிபெற்று, இறுதி நிலையில் பணிக்கு தோ்வு செய்யப்படாத தோ்வா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் கடந்த 2016, ஜூன் மாதம் பொது வெளிப்படுத்துதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் பணிக்கு தோ்வுசெய்யப்படாத தோ்வா்களின் விவரங்கள் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.
இந்த வலைதளம், தோ்வா்களின் தகவல்களைப் பயன்படுத்தி பொதுத் துறை அல்லது தனியாா் நிறுவனங்கள் தோ்வா்களுக்கு பணிவாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் யுபிஎஸ்சி நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் 52,910 தோ்வா்கள் பங்கேற்றனா். அவா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பணிக்குத் தோ்வு செய்யப்படாத தோ்வா்களின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் ‘பிரதிபா சேது’ என்ற வலைதளத்தை யுபிஎஸ்சி அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த வலைதளத்தில் பதிவு செய்து பொதுத் துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள் தோ்வா்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.