G0XpT31XwAA9ZOr

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருவிழாக்கள், பண்டிகை நாள்களையொட்டி பயணம் மேற்கொள்ள, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலான ஒன்றாக மாறிவிட்டது.

ரயிலில் டிக்கெட் முன்பதிவு என்பது தற்போது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் 120 நாள்களில் இருந்து 60 நாள்களாகக் குறைக்கப்பட்ட பின்னர், டிக்கெட் முன்பதிவு மற்றும் தத்கல் பதிவிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

நேரடியாக ரயில் நிலையத்தில் சென்று டிக்கெட் பதிவு செய்ய முயன்றாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன.

இதனால், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது டிக்கெட் முன்பதிவுகளில் கடுமையான நடைமுறைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, ரயில் பொது டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு ரயிலுக்கும் முன்பதிவு செய்யத் தொடங்கும் முதல் 15 நிமிடங்களில், ஆதார் பதிவு செய்த பயனாளர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதே சமயம், நேரடியாக ரயில் நிலையத்தில் செயல்படும் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், பொது முன்பதிவுக்கான 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பதிவு செய்த பயனர்களுக்கான முதல் 15 நிமிட கால அவகாசத்துக்குப் பின்னர் மற்றவர்களுக்கு டிக்கெட் பதிவுக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “உதாரணமாக, அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒரு ரயில் புறப்பட திடமிடப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கினால், முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனாளர்கள் மட்டுமே பொது முன்பதிவுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பு, இந்தக் கட்டுப்பாடு தத்கல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இருந்தது. இது ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு திறக்கப்படும்” என்றார்.

Aadhaar must for 1st 15 minutes of railway booking

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest