
தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கட்டியெழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்ச்சி இன்று (ஜூலை 27) நடைபெற்றது.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிரகதீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த மோடி, மத்திய கலாசார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார்.

பின்னர், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை மோடி வெளியிட்டார்.
அதன்தொடச்சியாக தனது உரையின் தொடக்கத்தில் மோடி, “இந்த இடத்தில், அவையில் என் சகாவான இளையராஜாவின் சிவபக்தி, இந்த மழைக்காலத்தில் மிகவும் பக்தி நிரம்பியதாக இருந்தது. சிவ தரிசனத்தால் அற்புதமான சக்தி இளையராஜாவின் இசை” என்று இளையராஜாவைப் புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய மோடி…
பாரதத்தின் அடையாளம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன்!
“இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை சோழப் பேரரசு இருந்தது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் இந்த பாரதத்தின் அடையாளங்கள்.
சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியம் பாரதத்தின் மெய்யான பிரகடனங்கள். சோழ சாம்ராஜ்யத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று.
ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலும் கூட பாரதத்தின் பாரம்பர்யத்தை சோழ சாம்ராஜ்யம் முன்னெடுத்துச் சென்றது.

வரலாற்று ஆய்வாளர்கள், மக்களாட்சி என்று சொன்னால் பிரிட்டிஷ் பற்றி பேசத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சோழ சாம்ராஜ்யத்தில் குடவோலை முறை வாயிலாக ஜனநாயக வழிமுறைப்படி தேர்தல்கள் நடந்தன.
இன்று உலகெங்கிலும் நீர் மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு பற்றிய ஏராளமான விவாதங்கள் நடக்கின்றன.
நமது முன்னோர்கள் முன்பே இவற்றின் மகத்துவத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
பாரதத்தின் கலாசார சிற்பிகள் சோழ பேரரசர்கள்!
மற்ற இடங்களிலிருந்து தங்கம், வெள்ளி அல்லது பசுக்கள், கால்நடைகள் என்று கவர்ந்து வந்த பல அரசர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஆனால், ராஜேந்திர சோழன் வட பாரதத்திலிருந்து புனித கங்கை நீரை கொண்டு வந்து தெற்கிலே நிறுவினார்.
இந்த நீரைக் கொண்டு சோழகங்கை ஏரியில் இட்டு நிரப்பினர். இது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.
ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தை நிர்மாணமும் செய்தார்.
இந்த ஆலயம் இன்றும் கூட உலகின் கட்டடவியல் அற்புதமாகத் திகழ்கிறது. அன்னை காவிரி பெருகிப் பாயும் இந்த பூமியிலே அன்னை கங்கைக்குத் திருவிழா எடுக்கப்படுவதும் கூட சோழ சாம்ராஜ்யத்தின் நற்கொடை.

அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பின்புலத்தின் நினைவில் மீண்டும் ஒருமுறை கங்கை நீரை நான் காசியிலிருந்து இங்கே கொண்டு வந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
சோழ அரசர்கள் பாரதத்தை கலாசார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள்.
இன்று நமது அரசாங்கம் சோழர்களுடைய இதே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறது.

தமிழ் கலாசாரத்தோடு இணைந்த புனித செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது.
நம் சைவ பாரம்பர்யம், பாரதத்தின் கலாசார நிர்மாணத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறது.
சோழப் பேரரசர்கள் இதில் முக்கியமான சிற்பிகளாக விளங்கினர். ஆகையால்தான் இன்றும் கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புடைய மையங்களில் தமிழ்நாடு மிகவும் முக்கியமானது.
சோழர்கள் காலத்தில் பொருளாதார உயரம் தொட்ட பாரதம்!
இன்று உலகம் நிலையில்லா தன்மை, வன்முறை, சுற்றுச்சூழல் போன்ற பிரச்னைகளில் அழிந்து வரும் வேளையில், சைவ சித்தாந்தம் நமக்கு அதற்குத் தீர்வு அளிக்கும் பாதையைக் காட்டுகிறது.
அன்பே சிவம் என்றார் சித்தர் திருமூலர். இந்தக் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்துவிடும்.
இதைத்தான் பாரதம் ஓர் உலகம், ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம் என்ற வகையில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
இன்றைய பாரதம் தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது.

தேசத்தின் கலை சின்னங்கள் களவாடப்பட்டு அயல்நாட்டில் விற்கப்பட்டு விட்டன. இவற்றை நாங்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறோம்.
2014-ம் ஆண்டுக்கு பின்பு 600-க்கும் அதிகமான தொன்மையான கலை படைப்புகள் உலகின் பல்வேறு தேசங்களில் இருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
சோழர்கள் காலத்தில் பொருளாதார மற்றும் போர்திறன் ஆகியவற்றில் உயரங்களை பாரதம் தொட்டது.
ராஜராஜ சோழன் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதை மேலும் பலப்படுத்தினார்.
புதிய பாரதத்துக்கான வரைபடம் சோழ சாம்ராஜ்யம்!
அவருடைய காலகட்டத்தில் பல்வேறு நிர்வாக மேம்பாடுகள் செய்யப்பட்டன. பலமான நிதி வழிமுறையை அமல் செய்தார்கள்.
புதிய பாரதத்தை நிறுவுவதற்கான பழைமையான வரைபடம் சோழ சாம்ராஜ்யம்.
நாம் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னால், நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் அளிக்க வேண்டும், நாம் நமது கடற்படையை நமது பாதுகாப்பு படைகளை பலமாக்க வேண்டும், நமது விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும். இன்றைய பாரதம் தனது பாதுகாப்பை, அனைத்தையும் விட பெரியதாகக் கருதுகிறது.
யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் பாரதம் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர மூலம் உலகமே உற்றுப் பார்த்தது.
நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் கொண்டாடப்படுகிறது.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும் கூட, அதன் கோபுரத்தை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை விட குறைவானதாக வைத்தார்.
தன் தந்தையால் கட்டியெழுப்பப்பட்ட ஆலயத்தின் கோபுரத்தை அனைத்தையும் விட உயரமானதாகத் தக்க வைக்க அவர் விரும்பினார்.
வரவிருக்கும் காலங்களில் தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், அவருடைய மைந்தன் முதலாம் ராஜேந்திரன் சோழனுடைய பிரமாதமான உருவச்சிலை நிர்மாணம் செய்வோம்.
இந்த உருவச் சிலைகள் நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடி மரங்கள் ஆகும். இன்று அப்துல் கலாமின் நினைவு தினம்.
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு தலைமை தாங்க கலாம், சோழ பேரரசர்களைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை.” என்று கூறினார்.