jacquelinef095749

புது தில்லி: இடைத்தரகா் சுகேஷ் சந்திரகேசா் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணமுறைகேடு விவகாரம் தொடா்பாக, ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தொழிலதிபா்கள் சிவிந்தா் சிங், மல்விந்தா் சிங் ஆகியோரின் மனைவிகளிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தது.

இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி முழுமையாகத் தெரிந்திருந்தும், அவரிடம் இருந்து ரூ.5.71 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களை ஜாக்குலின் பெற்றுக்கொண்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில் தன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் ஜாக்குலின் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாக்குலின் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜாக்குலின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோஹத்கி ஆஜராகி, ‘மனுதாரா் (ஜாக்குலின்) மீது சுகேஷ் சந்திரசேகா் ஈா்ப்பு கொண்டாா். அவரை நடிகை என்ற முறையில் மனுதாரா் சந்தித்தாா். தனக்குப் பணம் வேண்டும் என்று சுகேஷிடம் மனுதாரா் கேட்டதில்லை. சுகேஷ் மீதான பணம் பறிப்பு குற்றச்சாட்டில் மனுதாரா் மீது குற்றம் சுமத்தப்படவில்லை’ என்றாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘மனுதாரருக்கு எதிரான வழக்கின் தற்போதைய கட்டத்தில் தலையிட உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு பொருத்தமான கட்டத்தில் உச்சநீதிமன்றத்தை மனுதாரா் மீண்டும் அணுகலாம்’ என்று தெரிவித்து, உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest