202509213516786

துர்கா பூஜையையொட்டி வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த 7 சிலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது என்பதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

வங்கதேசத்தின் ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு (செப். 20) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த 7 சிலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துகள், துர்கா பூஜைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கோயிலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சரிஷாபாரி காவல் நிலைய அதிகாரி ரஷேதுல் ஹசான் தெரிவித்ததாவது, ”ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்தோம். இந்த விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் ஷிம்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான ஹபிபுர் ரஹ்மான் எனத் தெரியவந்துள்ளது.

மகாளய அமாவாசையைத் தொடர்ந்து இன்று அதிகாலை கோயிலைத் திறக்க ஹிந்து கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் சந்திர பார்மன் சென்றபோது, கோயிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், கோயிலில் துர்கா பூஜைக்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. சிலைகளில் தலை, கைகளை அவர்கள் உடைத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் ஹிந்து மக்கள் புகாரளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ரஹ்மானை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

2024 ஆகஸ்ட் முதல் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்ததிலிருந்து ஹிந்து கோயில்கள் மீது வங்கதேசத்தில் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இதுவரை வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71 – 72% இந்தியர்கள்!

Ahead of Durga Puja, seven Hindu idols vandalised in Bangladesh

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest