
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் (செப்டம்பர் 14) வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் பெரும் விவாதத்தைத் தூண்டியது.
ஒருபக்கம் பாகிஸ்தான் பயிற்சியாளர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் எனப் பலரும் அதிருப்தியில் இருக்க, மறுபக்கம் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ-யைச் சேர்ந்தவர்கள் எதிரணியிடம் கைகுலுக்க வேண்டும் எனச் சட்டம் ஒன்றும் இல்லை என்கிற தொனியில் பேசிவருகின்றனர்.

இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ இதில் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசவில்லை.
இந்த நிலையில், பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து முதல்முறையாக அதிகார்பூரமாக செயலாளர் தேவஜித் சாய்கியா இதில் வாய்திறந்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகான சர்ச்சை குறித்துப் பேசிய தேவஜித் சாய்கியா, “இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வெற்றி. சில மூன்றாம் தரப்பினர் அல்லது விரோத நாடுகளின் கூச்சல்களுக்கு கவனம் செலுத்துவதை விட இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும்.
அதைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது. அதற்கு பதில், நம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பாராட்ட வேண்டும் மற்றும் பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார்.

உலகில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய, ஐசிசி-யில் அதிக செல்வாக்குமிக்க கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, உலகக் கோப்பைத் தொடரிலோ அல்லது ஆசிய கோப்பைத் தொடரிலோ இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறும்போது வாய்திறக்காமல், இப்போது தேசபக்தி எனப் பார்வையாளர்களை ஏமாற்றுவதாகப் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.