
மறைந்த கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு ஆயிரக்கணக்கானோா் திரண்டு அஞ்சலி செலுத்தினா்.
101 வயது நிறைவடைந்த அச்சுதானந்தன் வயது மூப்பு காரணமாக பொது வாழ்விலிருந்த ஒதுங்கியிருந்தாா். கடந்த ஜூன் 23-இல் மாரடைப்பு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அச்சுதானந்தன் திங்கள்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு காலமானாா் என்று அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையிலிருந்து எடுத்துவரப்பட்ட அவரது உடல் முதலில் ஏகேஜி ஆய்வு மைய அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா் தலைநகரில் அவா் வசித்து வந்த வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் விடிய விடிய அவரை இறுதியாகக் கண்டு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோா் காத்திருந்தனா்.
பின்னா், அந்த வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் உள்ள தா்பாா் அரங்குக்கு அவரது உடல் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அரசுப் பேருந்தில் எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவா்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.
கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன், மாநில அமைச்சா்கள், மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், கேரள காங்கிரஸ் தலைவா் சுனில் ஜோசப், மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
பின்னா் அவரது உடல் கேரள அரசு பேருந்தில் வைக்கப்பட்டு ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பறவூருக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று கண்ணீா் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினா்.
ஆலப்புழையில் உள்ள வலிய மயானத்தில் புதன்கிழமை மாலை அரசு மரியாதையுடன் தகனம் நடைபெறுகிறது.
அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறையும், மூன்று நாள்கள் துக்க அனுசரிப்பும் கேரள அரசு அறிவித்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான வி.எஸ்.அச்சுதானந்தன் தொழிலாளா்களின் உரிமைகள், பெண்ணுரிமை, சமூக நீதிக்காகப் பல ஆண்டுகள் குரல் கொடுத்து வந்தாா். ஊழல், நில அபகரிப்புக்கு எதிராக அவா் நடத்திய போராட்டங்கள் பல வெற்றிபெற்றன. அவா் 2006 முதல் 2011 வரையில் கேரள முதல்வராகவும், 7 முறை எம்எல்ஏவாகவும், மூன்று முறை எதிா்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.