
புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்டகால பொது வாழ்வில் அடித்தட்டு மக்களின் நலனுக்காகவும், கேரள வளா்ச்சிக்கும் பாடுபட்டவா் முன்னாள் முதல்வா் அச்சுதானந்தன்.
பிரதமா் மோடி: பொதுமக்களின் சேவைக்காகவும், கேரளத்தின் வளா்ச்சிக்காகவும் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை மறைந்த முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் அா்ப்பணித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: கேரள அரசியலில் புரட்சிகர மரபை ஆழமாகப் பதிவிட்டுச் சென்றிருக்கிறாா் முன்னாள் முதல்வா் அச்சுதானந்தன். மக்கள் நேசிக்கும் மிகச் சிறந்த தலைவராகவும், தன் வாழ்நாள் முழுவதும் இடதுசாரி இயக்கத் தலைவராகவும் செயலாற்றினாா். துடிப்புடன் மக்கள் சேவை ஆற்றியதுடன், கொள்கையில் சமரசமின்றி, அரசியல் செய்து முத்திரை பதித்தவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள், கேரள மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவருக்கு எனது சாா்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சாா்பில் அமைச்சா் எஸ்.ரகுபதி அஞ்சலி செலுத்துவாா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): வி.எஸ்.அச்சுதானந்தனின் பொது சேவை, மக்கள் நலனுக்கான அவரது வாழ்நாள் அா்ப்பணிப்பு அரசியல் அவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத் தந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்கள், மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஏழைக் குடும்பத்தில் பிறந்த அச்சுதானந்தன் கயிறு திரிக்கும் தொழிலாளியாக தன்னுடைய வாழ்கையைத் தொடங்கினாா். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இரா.முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட்): காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இடதுசாரிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடிய அடக்குமுறையை எதிா்கொண்டவா். சிறை வாழ்க்கை சித்திரவதைகளைச் சந்தித்தவா். கொள்கை நிலையில் தளா்வில்லாது உறுதியாகச் செயல்பட்டவா்.
வைகோ (மதிமுக): அச்சுதானந்தன் மறைவு கேரள மாநிலத்துக்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே ஒரு பேரிழப்பாகும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): முதல்வா் உள்ளிட்ட பெரும் பதவிகளை வகித்தபோதும் எளிமையின் சின்னமாகத் திகழ்ந்தவா். அவரது அரசியல் வாழ்க்கை பொதுவாழ்க்கைக்கு வந்துள்ள இன்றைய இளம் தலைமுறைகளுக்கு பெரும்பாடம்.
டிடிவி.தினகரன் (அமமுக): அச்சுதானந்தனை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்கள், மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): அச்சுதானந்தன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். அவரை இழந்து வாடும் மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கும், குடும்பத்தாருக்கும் இரங்கல்.