
அடுத்த 20 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் இருக்கும் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெற்று வருகின்றன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கத்தை தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.
அப்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது சீனப் பயணம் குறித்து பேசினார். ”படை பின்வாங்கல், வர்த்தக கட்டுப்பாடுகள், பயங்கரவாதம் குறித்து பேசுவதற்காகதான் சென்றேன். ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட செல்லவில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டு பேசியதாவது, “எதிர்க்கட்சியினருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், வேறு சில நாடுகள் மீது நம்பிக்கை இருப்பது என்பதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது.
அவர்களின் கட்சியில் அந்நியர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர்கள் கட்சியின் அனைத்து விஷயங்களையும் இந்த அவையிலும் திணிக்கக் கூடாது.
அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சி பகுதியிலேயே அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அங்கேயேதான் அமர்ந்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.