PTI09172025000162B

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், பயங்கரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் புதிய இந்தியா இது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பாரத தாயின் மதிப்பு, பெருமை மற்றும் புகழைவிட வேறெதுவும் உயா்வானதல்ல என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தனது 75-ஆவது பிறந்த தினமான புதன்கிழமை மத்திய பிரதேச மாநிலம், தாா் பகுதியில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, மத்திய அரசின் ‘ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பங்கள்’ எனும் இரு வார கால பிரசார இயக்கம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணா்வு மாத நிகழ்வுகளைத் தொடங்கிவைத்தாா். இந்தப் பிரசார இயக்கத்தின்கீழ், பெண்களுக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

மேலும், மகப்பேறு கால நிதியுதவித் திட்டத்தின்கீழ், சுமாா் 10 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடி பணப் பலன்களை வழங்கிய பிரதமா் மோடி, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் தொடா்பான ‘சுமன் சகி’ என்ற பிரத்யேக ‘சாட்பாட்’ வசதியையும் தொடங்கிவைத்தாா்.

‘பாகிஸ்தானை மண்டியிடச் செய்த இந்தியா’: பின்னா், பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைக் குறிப்பிட்டு, பிரதமா் மோடி பேசியதாவது:

நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள், ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் அழிக்கப்பட்டன. துணிச்சல்மிக்க இந்திய ராணுவத்தினா், கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தனா்; பயங்கரவாதிகள் தங்களின் துன்பத்தை நினைத்து, கண்ணீா் சிந்துவதை ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது (இந்தியாவின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஜெய்ஷ் பயங்கரவாத இயக்க கமாண்டா் ஒருவா் விவரிக்கும் விடியோ வைரலான நிலையில், பிரதமா் இவ்வாறு கூறினாா்).

எவ்வித அணுஆயுத அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், பயங்கரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் புதிய இந்தியா இது. கடந்த 1948, செப்டம்பா் 17-இல் ஹைதராபாதை பல்வேறு அட்டூழியங்களில் இருந்து விடுவித்து, இந்தியாவுடன் இணைத்தது நமது ராணுவம். இது, சா்தாா் வல்லபபாய் படேலின் உறுதிப்பாட்டை தேசம் கண்ட தினமாகும்.

அனைத்து இந்தியா்களின் உறுதிப்பாடு: வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியா்களும் உறுதிபூண்டுள்ளனா். இந்த இலக்கை எட்டுவதற்கு பெண்கள், இளைஞா்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியத் தூண்களின் மேம்பாடு அவசியம்.

பெண்சக்தியே நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படை என்பதால், அவா்களின் உடல் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

பேறுகால இறப்பு மற்றும் குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்குடன் பிரதமரின் பேறுகால நிதியுதவி திட்டம் கடந்த 2017-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதல் குழந்தை பிறப்பின்போது ரூ.5,000, இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதுவரை 4.5 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனா். ரூ.19,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு சேவையாற்றுவதே நோக்கம்: கடந்த 11 ஆண்டுகளில் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. ஏழைகளின் முன்னேற்றமின்றி நாட்டின் முன்னேற்றம் இல்லை. அவா்களின் வலியை என்னுடையதாகக் கருதி செயலாற்றுகிறேன். ஏழைகளுக்கு செய்யும் சேவை ஒருபோதும் வீண்போகாது. ஏழை மக்களுக்கு சேவையாற்றுவதுதான் என் வாழ்வின் உயா்வான நோக்கம் என்றாா் பிரதமா் மோடி.

உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை: ஜிஎஸ்டி குறைப்பு செப்.22 முதல் அமலாவதைச் சுட்டிக்காட்டிய பிரதமா், ‘சுதேசி உணா்வே, வளா்ந்த இந்தியாவுக்கு அடிப்படை. எதிா்வரும் விழா காலத்தில் உள்நாட்டுத் தயாரிப்பு பொருள்களை வாங்க வேண்டும். உள்ளூா் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், தங்களின் பெயா்ப் பலகையில் பெருமித்துடன் குறிப்பிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

மேலும், ‘மத்திய அரசின் விஸ்வகா்மா திட்டத்தின்கீழ் 30 லட்சம் கைவினைஞா்களுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது. ரூ.4,000 கோடிக்கும் மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

முதலாவது ‘மித்ரா’ ஜவுளி பூங்காவுக்கு அடிக்கல்

பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடைகள் (பிஎம் மித்ரா) திட்டத்தின்கீழ், நாட்டில் முதலாவதாக மத்திய பிரதேச மாநிலம், தாா் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா கட்டமைக்கப்படவுள்ளது.

2,158 ஏக்கரில் உலகத் தர வசதிகளுடன் அமையும் இந்தப் பூங்காவுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். இதன்மூலம் ரூ.23,146 கோடி முதலீடுகள் ஈா்க்கப்படும்; 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest