GyDxlt3WsAAACG-

பீகார் மாநிலத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் பற்றி முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டும் காங்கிரஸ், திமுக சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் 12 மணி அளவில் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.

இந்தியா கூட்டணி பேரணி

நாடாளுமன்ற அலுவல்கள் காலை 11 மணிக்கு தொடங்கியவுடன் இந்த விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவை நடவடிக்கை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவையில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக வந்தனர்.

அதிகரித்த பதற்றம்!

நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டி அமைந்திருக்கக் கூடிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அலுவலகத்தின் முன்பாகவே டெல்லி காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.

பாதுகாப்பு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் துணை ராணுவ படையினரும் ஏராளமான எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்தனர். நிலவரம் கைமீறி போகும்போது அதனை சமாளிக்க ஏதுவாக கண்ணீர் புகை குண்டுகள் வீசும் வாகனம் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது

சரியாக 11.40 மணியளவில் தடுப்புகளைத் தாண்டி தேர்தல் ஆணையத்தை நோக்கி முன்னேற எதிர்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். அவர்களை கனமான கயிறுகள் உள்ளிட்டவை வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர், அதையும் மீறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா தடுப்புகள் மீது ஏறி அதைத் தாண்டி குதிக்க முயற்சி செய்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த ஜோதிமணி உள்ளிட்ட மற்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தடுப்புகள் மீது ஏற அவர்களை காவல்துறையினர் கீழே தள்ளிவிட பதற்றம் அதிகரித்தது.

தடுப்புகளை தாண்டிய அகிலேஷ்

இதனை அடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தரையில் அமர்ந்து பாஜக-விற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் தொடர்ந்த நிலையில், அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் சொல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்தனர். ஆனால் அதையும் தாண்டி போராட்டம் தொடர்ந்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறையின் வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பவார், திமுக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

அப்பொழுது காவல்துறையினரது பிடியிலிருந்து நழுவிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான நாடாளுமன்ற உறுப்பினர் அகிலேஷ் யாதவ், காவல்துறையினரின் தடுப்புகளை தாண்டி தேர்தல் ஆணையம் நோக்கி செல்ல முற்பட்டார். அதனை அடுத்து சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரை பின்பற்றி முன்னேறினர். பிறகு அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், குண்டு கட்டாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி பிறகு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டனர். பிறகு அவர்களிடம் கையொப்பம் வாங்கி வைத்துக்கொண்டு காவல்துறையினர் விடுவித்தனர்.

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் இந்தப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest