
அனிருத் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியுள்ளார்.
ஒவ்வொரு பத்து ஆண்டிற்கும் ரசிகர்களின் ரசனைகள் மாற மாற, புதுப்புது விஷயங்களின் மீதும் உருவாக்கங்களின் மீதும் ஈர்ப்பு ஏற்படுகின்றன. தமிழ் இசைத்துறையில் அப்படி நிறைய நடந்தாலும் எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இவர்களைத் தொடர்ந்து அனிருத் என ஒரு வரிசை இருக்கிறது.
பழைய அலைகளின் சீற்றம் குறையக் குறைய புதிய அலைகள் வருவது இயல்புதான். ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரை நிகழாத ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தன் இசையமைப்பில் ஒரு திரைப்படம்கூட வெளியாகாத இசையமைப்பாளருக்கு ஒரே நேரத்தில் 8 திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு. சாதாரணமானதா? யாருப்பா இவர் எனப் பார்த்தால், அது சாய் அபயங்கர்.
சில ஆல்பம் பாடல்கள் மூலம் கவனம் பெற்றவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அனிருத்துக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகளெல்லாம் இப்போது சாய் அபயங்கரின் முடிவுக்காக காத்திருக்கின்றன.
இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சாய் அபயங்கரிடம், “நீங்கள் அனிருத்துக்கு போட்டியா” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு சாய், “அனிருத் நிறைய சாதனைகளைச் செய்துவிட்டார். நான் இப்போதுதான் அறிமுகமாகியிருக்கிறேன். எனக்கும் அவருக்கு போட்டி கிடையாது. ஆல்பம்களுக்கும் சினிமாவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பலரும் புதிதாகக் கேட்கிறார்கள். அதனால், சுதந்திரமாக பணியாற்றுகிறேன். கடந்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு டிரெண்டிங் அழுத்தம் இல்லை. ஆனால், இன்று இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் இசையில் முழு கவனம் செலுத்த முடிகிறது. மேலும், எனக்கு எந்த பி.ஆர். (மார்க்கெட்டிங்) அணியும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரோபோ சங்கர் மறைவு: உருக்கமாக பதிவிட்ட மகள் இந்திரஜா!