
“எங்கள் கூட்டணியில் மட்டுமல்ல, அனைத்து கட்சிகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரிநிதித்துவம் வழங்கவேண்டும்…” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசியுள்ளார்.

மதுரை பாண்டி கோயில் அருகே மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கோரிக்கை மாநாட்டில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்றனர். ஜவாஹிருல்லா பேசும்போது, “நாம் வாழும் இந்த நாடு மதச்சார்ப்பற்ற நடாக இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் தேர்வு செய்தார்கள். பாகிஸ்தானைவிட எல்லா உரிமைகளையும் இங்கு பெற்றிருக்கிறோம், அனுபவித்திருக்கிறோம்.
இந்த மேடையில் இந்து மத சாமியார், கிறிஸ்தவ போதகர் உள்ளனர். நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூக நல்லிணக்கத்திற்கான மாநிலம் தமிழகம்.
சுதந்திரத்திற்கு முன்பு சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை ஒதுக்குவதுதான் சிறுபான்மை மக்களின் நியாயமான நலனை பாதுகாக்கும் என்றார்கள். நாடாளுமன்றத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப தனித் தொகுதிகள் உருவாக்கப்படும் என சொல்லப்பட்டது. இந்திய அரசமைப்பு சட்டம் அமைப்பதற்கான கமிட்டி மோதிலால் நேரு தலைமையில் அமைக்கப்பட்டபோது, மத்திய அரசிலும், மாநில சட்டமன்றத்திலும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பல்வேறு சமூகத்தின் அச்சத்தை நிறைவேற்ற அதுதான் ஒரே பகுத்தறிவான முறை என மோதிலால் நேரு அறிக்கை சமர்பித்தார். அரசியல் நிர்ணய சபையில் கொண்டு வந்த தீர்மானத்திலும் சிறுபான்மையினருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என, கூறப்பட்டது.

பன்னாட்டு அளவில் ஐநா ஆவணங்களும் சிறுபான்மையினருக்கு உரிய ஒதுக்கீடு பாதுகாப்பு வேண்டும் என சொல்கிறது.
சிறுபான்மையினருக்கு பிரநிதித்துவம் அளிக்கவேண்டும் என்ற விதிகள் இருந்தாலும், 75 ஆண்டாக நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. 2011-ல் எடுத்த மக்கள் தொகை அடிப்படையில் 80 பேர் இருக்கவேண்டிய மக்களவையில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களில் 296 பேர் மட்டும் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களில் 4 பேர் மட்டும் உள்ளனர்.

வக்பு சட்ட திருத்தம் இரு அவையிலும் கொண்டு வந்தனர். அது திருத்த சட்டமல்ல, சச்சார் குழுவின் ஒரு பரிந்துரையைக் கூட ஏற்கவில்லை. கோயில், சர்ச், பள்ளிவாசல்கள் குறித்த ஆவணங்கள் பெரும்பாலும் இல்லை. வக்பு சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு மட்டும் வர இருக்கிறது. வக்பு சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவே மோடி அரசு இச்சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.
மக்கள் பிரதநிதித்துவம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அபுல்கலாம் ஆசாத் கனவு நிறைவேற்றப்படவேண்டும். வக்பு சட்டத்திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது . மோடி அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டு காலம் போராடினர்கள், மோடி அரசு திரும்பப் பெற்றது. அதுபோல் வக்பு சட்டத்திருத்தத்தையும் குப்பையில் வீசும் வரையிலும் நமது போராட்டம் நடக்கும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள் வழங்கவேண்டும் என பேசினார்கள். எம்.எல்.ஏக்-களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. எங்களது தலைமுறை சுபிட்சமாக வாழவேண்டும் என்பதால்தான்
எங்கள் கூட்டணியில் மட்டுமல்ல, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய பிரிநிதித்துவம் வழங்கவேண்டும். தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தினர் மனித நேய மக்கள் கட்சியில் அணி வகுத்து நிற்கவேண்டும்.” என்றார்