
பாமக-வில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் நடைபெற்று வரும் கட்சி நிர்வாக மோதலுக்கு மத்தியில், ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.
உடனே அன்புமணி அதற்குப் போட்டியாக, அவருக்கு முன்பாக பொதுக்குழுக் கூட்டம் நடத்தும் வகையிலும், ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டுவதாக அறிவித்தார்.
இதனால், அன்புமணி விடுத்துள்ள பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டுமென ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “2022 மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது.
புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே 30-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறார்.
மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது எனக் கடந்த ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தைக் கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
ஆனால், பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் எனக் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அன்புமணி விடுத்துள்ள பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் மாலை 5:30 மணிக்கு தனது அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கேட்டுக்கொண்டார்.
இதில், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் உடல்நிலை காரணமாக ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என்று தெரிவித்தார்.
பின்னர், காணொளி வாயிலாக ஆஜராவார் என்று அவர் கூறியதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
மறுபக்கம், அன்புமணி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அதைத்தொடர்ந்து, இரு தரப்பிடமும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்தினார்.

சுமார் ஒருமணிநேரம் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் அன்புமணி நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டார்.
பின்னர் சில நிமிடங்களில் நீதிபதி தரப்பிலிருந்து ராமதாஸ், அன்புமணி, அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு நேரில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, மூன்று தரப்பில் நீதிபதி முன் ஆஜராகினர்.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.