G1ns10gXcAAX3Z5

ஷுப்மன் கில்லின் அப்பாவித்தனமான முகம் அவரைக் காப்பாற்றியதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக கிரிக்கெட் விளையாடிவர்கள். கிரிக்கெட் திடலிலும், திடலுக்கு வெளியேயும் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அந்த மாநிலத்துக்காக உள்ளூர் போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இருவரும் இடம்பெற்று விளையாடியுள்ளனர்.

சிறுவயது முதல் ஒன்றாக விளையாடிய இருவரும் தற்போது இந்திய அணியில் மிக முக்கியமான வீரர்களாக மாறியுள்ளார்கள். ஷுப்மன் கில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வரும் நிலையில், அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில், ஷுப்மன் கில்லின் அப்பாவித்தனமான முகம் அவரைக் காப்பாற்றியதாக ஷுப்மன் கில் குறித்த சிறுவயது நினைவுகளை அபிஷேக் சர்மா பகிர்ந்துள்ளார்.

பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஷுப்மன் கில் குறித்து அபிஷேக் சர்மா பகிர்ந்து கொண்டதாவது: பஞ்சாப், தில்லி மற்றும் ஹரியாணாவிலிருந்து சிறுவர்கள் பலரும் 16-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே பயிற்சிக்கு வருவோம். தர்மசாலா திடலிலிருந்து எங்களது ஹோட்டல் 500 மீட்டர் தொலைவில் இருக்கும். நாங்கள் பேருந்தில் பயணித்து திடலை சென்றடைவோம். பேருந்தின் ஓட்டுநர் பேருந்தில் பாடல்கள் போடமாட்டார். ஆனால், நாங்கள் பஞ்சாபி பாடல்கள் போட வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபடுவோம். பின்னால் இருந்து ஷுப்மன் கில்லே அதிகப்படியாக கூச்சலிடுவார்.

இந்த சம்பவம் பிரச்னையாக உருவெடுத்து பயிற்சியாளர்கள் வரை சென்றுவிட்டது. சிறுவர்கள் வாக்குவாதம் செய்வதாக ஓட்டுநர்கள் பயிற்சியாளர்களிடம் புகாரளித்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர். நான், பிரப்சிம்ரன் சிங், ஷுப்மன் கில் 5-வது நபராக வரிசையில் நிற்கிறார். ஒட்டுநர்களிடம் பயிற்சியாளர்கள் யார் வாக்குவாதத்தில் ஈடுபட்டது எனக் கேட்கிறார்கள். ஷுப்மன் கில்லைக் காட்டி இந்த சிறுவனா என பயிற்சியாளர்கள் கேட்க, ஓட்டுநர் இந்த பையன் இல்லை எனக் கூறிவிட்டார். இதனைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

வரிசையில் நின்ற சிறுவர்கள் அனைவரும் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என கையெழுத்திட்டோம். அந்த கடிதத்தில் நான்தான் முதல் ஆளாக கையொப்பமிட்டேன். எனக்கு மிகவும் சோகமாக இருந்தது. ஷுப்மன் கில் ஏன் மாட்டிக் கொள்ளவில்லை என்பதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதனை முதலில் ஆரம்பித்த ஷுப்மன் கில் மாட்டிக் கொள்ளவில்லை. அவர் முகத்தை மிகவும் அப்பாவித்தனமாக மாற்றிக்கொண்டு தப்பித்துவிட்டார் என்றார்.

Indian opener Abhishek Sharma shared memories of Shubman Gill’s innocent face saving him.

இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest