
ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.
அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வங்கிக் கடனை சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கடந்த ஜூலை 24-ஆம் தேதிமுதல் 3 நாள்களுக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குத் தொடா்புள்ள 50 நிறுவனங்கள், 25 பேருக்குச் சொந்தமான 35 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அந்த இடங்களில் அனில் அம்பானி குழும நிா்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களும் அடங்கும்.
இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ஆக.5-ஆம் தேதி ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவரின் குழும நிறுவனங்களைச் சோ்ந்த சில நிா்வாகிகளையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், அனில் அம்பானி தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!